Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தது சரியா? முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கருத்து

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவுப் பிறப்பித்திருப்பது சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இது தொடர்பாகக் கட்சியின் கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸுக்கு 18 எம்.எல்.ஏ-க்களும் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் சபாநாயகரும் மூத்த வழக்கறிஞருமான ஆவுடையப்பனிடம் கேட்டதற்கு, ’’சபாநாயகர் தனபால் அளித்த விளக்க நோட்டீஸுக்கு, பதில் அளிக்காததால் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அ.தி.மு.க-வில்தான் இப்போதும் நீடிக்கிறார்கள். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அவர்கள் அந்தக் கட்சியிலேயே இப்போதும் நீடிக்கும் நிலையில், அவர்களைக் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்திருப்பது சட்ட விரோதமானது.

எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் கட்சித் தாவலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்கும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டப்படி செல்லாது. பாதிப்புக்குள்ளான 18 பேரும் நீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்களுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும். ஏற்கெனவே கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியின்போது 7 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோல ஏற்கெனவே பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் அதுதான். ஆனால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியாத நிலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கிறது. அதனால் இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடிவு செய்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே 18 எம்.எல்.ஏ-க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது சரியான நடைமுறை அல்ல’’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement