வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (18/09/2017)

கடைசி தொடர்பு:10:18 (19/09/2017)

"என் மகள் வழக்கில் சில தடயங்களை காவல்துறையே உருவாக்கியுள்ளது!" - விஷ்ணுபிரியாவின் அப்பா #RememberingVishnuPriya

விஷ்ணுபிரியா

விஷ்ணுபிரியா இறந்து இன்றோடு இரண்டு வருடங்களாயிற்று. அது சரி, யார் இந்த விஷ்ணுபிரியா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இப்படிப் பல விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம் என்பது அநீதி செய்பவர்களுக்குப் பலமாகிவிடுகிறது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மாவட்ட துணைக் கண்காணிப்பாளராக (DSP) பணிபுரிந்தவர்தான் விஷ்ணுபிரியா. தன் வேலையில் நேர்மையாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாகவும் இருந்தவர். லஞ்சம் வாங்குவது, பணி நேரத்தை வீணடிப்பது இரண்டையும் அறவே வெறுத்தவர். அதனால், பொதுமக்களிடையே இவருக்கு நல்ல பெயர். அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப் பதவி உயர்வுபெற்று, தனது சிறப்பான பணிகளை அளிப்பார் எனக் கருதப்பட்டவர். ஆனால், எவரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் மரணத்துக்கான காரணத்தை விளக்கி கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். 

விஷ்ணுபிரியாவின் இந்த முடிவுக்குக் காரணம், அப்போது நடந்த கோகுல்ராஜின் ஆணவக்கொலை. ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெண்ணைக் காதலித்த வந்த நிலையில், தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த ஆணவக்கொலைக் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டவர்தான் விஷ்ணுபிரியா. 

கோகுல்ராஜ்

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கிய நாள் முதலே தனக்கு மிரட்டல்கள் வருவதாக, தோழிகளான சக பணியாளர்களிடம் கூறிவந்திருக்கிறார் விஷ்ணுபிரியா. குறிப்பாக, கோகுல்ராஜ் வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டார். அவர் தந்த நெருக்கடியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தந்த பணி நெருக்கடியுமே விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. 

விஷ்ணுபிரியாவின் தோழியும் காவல்துறை அதிகாரியுமான மகேஸ்வரி, 'விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. நேர்மையான அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தப்படுகிறார்கள்'' என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

விஷ்ணுபிரியாவின் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தவந்த நிலையில், அவரின் தந்தை ரவி, 'இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மையான விஷயங்கள் வெளிவரும்' எனக் கோரியிருந்தார். கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில், விஷ்ணுபிரியாவின் வழக்கு பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த துரைமுருகன் கேள்வி எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருவதாகக் கூறினார். 

விஷ்ணுபிரியா

எளிமையான குடும்பத்திலிருந்து ஏராளமான கனவுகளையும் தூய்மையான லட்சியத்தையும் மனதில் ஏந்திவந்த விஷ்ணுபிரியாவின் பயணம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் பேசினோம். 

"ஆசை ஆசையாக எம் புள்ளைய போலீஸ் வேலைக்கு அனுப்பினோம். தினமும் போன் பண்ணிப் பேசுவோம். இப்படி ஆகும்னு நாங்க கனவிலும் நினைக்கலை. யாருக்கும் பயப்படாமல் தன் வேலையைச் செய்தாள். உயர் அதிகாரி கொடுத்த அழுத்தமே தற்கொலை செய்யவெச்சிருக்கு. அவங்க எல்லாம் ஒருநாள் வருந்துவாங்க. அதிலும், செந்தில்குமார் நிச்சயம் வருந்துவார். அவரைக் குறைந்தபட்சம் சஸ்பெண்ட்கூட செய்யலை. அவர் பணியிலேயே இருந்துக்கிட்டு வழக்கை விசாரிச்சா சரியா வருமா? விஷ்ணுபிரியா தற்கொலை விஷ்ணுபிரியாசெய்த அறையைச் சோதனை செய்துவிட்டு சீல் வைக்கவே இல்லை. சில தடயங்களைக் காவல் துறையே உருவாக்கினாங்க. என் மகளின் டைரியில் சில பக்கங்களைக் கிழிச்சிருக்காங்கனு சந்தேகம் இருக்கு. என் பொண்ணு டி.எஸ்.பி-யாக வேலையிலிருந்து இறந்திருக்கிறாள். ஆனா, இதுவரைக்கும் அரசு ஒன்றரை லட்சம்தான் இழப்பீடு தந்திருக்கு. கேட்டால், அவ்வளவுதான் எலிஜிபிலிட்டினு சொல்றாங்க. ஒரு பெண் முதல்வராக இருந்தும் விஷ்ணுபிரியா மரணம் பற்றி ஜெயலலிதா, 'விஷ்ணுபிரியா மரணம் ஒன்றும் சிக்கலானது இல்லை' என்று சொன்னதும் அதைச் சொன்ன தொனியையும் நினைச்சு இப்பவும் வருத்தமா இருக்கு. புத்திர சோகம் கொடுமையானதுனு சொல்வாங்க. அதை அனுபவிக்கும்போதுதான் எவ்வளவு வலிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம்" என்று கண்ணீருடன் குரல் தழுதழுத்தார் ரவி. 

இந்த வழக்கை சி.பி.சிஐடி அதிகாரி நாகஜோதி தலைமையிலான டீம் விசாரித்துவந்த நிலையில், சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சி.பி.ஐ தரப்பில் விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் ஒருமுறை மட்டுமே விசாரித்துள்ளனர். தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியான டிஎஸ்பி மகேஸ்வரியிடமும் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர், விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான சில ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். விஷ்ணுபிரியாவின் உரையாடல் மற்றும் அவரைக் கொலை செய்வதிருப்பதற்கான காரணங்கள் குறித்த தகவல்களையும் மகேஸ்வரி அளித்துள்ளதாகத் தெரிகிறது. 

விஷ்ணுபிரியாவின் டைரி மற்றும் மெமரி கார்டு, இரண்டு செல்போன்கள், டேப், லேப்டாப் போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக விஷ்ணுபிரியாவின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சி.பி.ஐ தரப்பில் ஒரு அதிகாரியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, தற்போது முக்கியமான மீட்டிங்கில் உள்ளதால், அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று முடித்துக்கொண்டார். 

சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியிலிருந்து உயிர் துறந்த விஷ்ணுபிரியாவின் மரணத்துக்குச் சட்டமும் நீதியும் என்ன பதில் அளிக்கப்போகிறது?


டிரெண்டிங் @ விகடன்