18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்: கொந்தளித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ

’டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை’ என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

thamimun
 

இது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க இரண்டு அணியாகச் செயல்படும் நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர், 'இதுபோலத்தான் நடவடிக்கை வரும் என்று சொல்லியிருந்தார். அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவுக்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை, அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.

இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய அரசையும் ஆளுநரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!