தகுதி நீக்கம்! முன்கூட்டியே கணித்த ஹெச்.ராஜா!

H.Raja

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடந்த மாதம் 23-ம் தேதி கூறியிருப்பது தற்போது நடந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். மேலும் அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, முதல்வராக விரும்பினார். முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-விலிருந்து விலகி தனி அணியை உருவாக்கினார் பன்னீர்செல்வம். சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் சசிகலாவும் தினகரனும் சிறைக்குச் சென்ற பின்னர் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது தினகரன் ஆதரவாளர்களுக்குப் பிடிக்கவில்லை. திடீரென தினகரனைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக அறிவித்தது பழனிசாமி அணி. இதைத் தினகரன் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தபின்னர், கட்சிப்பணியில் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்தார் தினகரன்.

இந்தச் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் அணி வைத்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது பழனிசாமி அணி. இதையடுத்து இணைப்பு விழா நடந்துமுடிந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதனால் ஆவேசமடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக் கொறடா ராஜேந்திரன், 19 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு 19 பேரும் விளக்கமளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்றுகூறி சபாநாயகர் மீண்டும் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே, ஜக்கையன் திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். 'ஜக்கையன் விலைபாேய்விட்டார்' என்று தினகரன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 23-ம் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள். மீதம் 214 தகுதியான எம்.எல்.ஏ-க்கள் இருப்பார்கள். எனவே ஆட்சியைத் தொடர 108 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுப் போதுமானது" என்று கூறியிருந்தார்.

ஹெச்.ராஜா கூறியிருந்த நிலையில், சபாநாயகர் தனபால் இன்று 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்தப் பதிவின் மூலம் பா.ஜ.க சொல்வதைக் கேட்டுத்தான் இந்த தமிழக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!