Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதனால்தான் இளவரசி மகள் நீட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றாரா?!

கிருஷ்ணபிரியா

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வருமாறு 'கிருஷ்ணபிரியா அறக்கட்டளை' சார்பில் தொலைக்காட்சியில் அழைப்பு விடுக்கப்பட்ட விளம்பரம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 'யார் இந்த கிருஷ்ணபிரியா?' என்று எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருக்கும் கேள்விக்கான பதில்... 'போயஸ் தோட்டத்தின் புதுவரவுதான் இந்த கிருஷ்ணபிரியா'!  

கிருஷ்ணபிரியா... ஜெயலலிதா மரணத்தையடுத்து நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின்போது, ஜெ-வின் பூதவுடல் தாங்கிய ராணுவ ஊர்தியில் சசிகலா அமர்ந்திருந்தார். கூடவே தன்னருகில் கிருஷ்ணபிரியாவையும் அமர்த்திக்கொண்டார் சசிகலா. அப்போதே, 'யார் இந்தப் பெண்?' என்றக் கேள்வியோடு அனைவரது புருவத்தையும் உயர வைத்தவர்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் கிருஷ்ணபிரியா, அடுத்தவர் ஷகிலா, கடைக்குட்டி விவேக். இதில், ஜெயா டி.வி, ஜாஸ் சினிமா என தொழில் நிர்வாகங்களை விவேக் கவனித்துக்கொள்ள, 'கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன்' என்ற பெயரில், ஏழை குழந்தைகளுக்கான கல்வி உதவி மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கான சேவை என பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார் கிருஷ்ணபிரியா.

2015 டிசம்பரில், சென்னையை தத்தளிக்கவைத்த வெள்ளப் பாதிப்பின்போதும், கடந்த ஆண்டு வர்தா புயல் உலுக்கியெடுத்தபோதும், இவரது அறக்கட்டளை சார்பில் சத்தமில்லாமல் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளார். இதுநாள் வரையிலும் பொதுவெளியில் தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல் சமூக சேவைகள் செய்துகொண்டிருந்தவர், 'நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்' மூலம் முதன்முறையாக தன்னை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் கிருஷ்ணபிரியா.

கிருஷ்ணபிரியா 1

நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை செப்டம்பர் 10-ம் தேதி நடத்தவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தவர், அரசியல் சூழல்களால் போராட்டத் தேதியை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில், இவரது அமைப்பினர் நடத்திய நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல் அரங்கிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். தமிழக அரசியலே தடதடத்துக்கொண்டிருந்த அந்தச் சூழலில், 'போயஸ் தோட்டத்திலிருந்து, புதிய அரசியல் அவதாரமாக கிருஷ்ணபிரியா உருவெடுப்பார்' என்ற பேச்சுக்கள் பலமாக அடிபட்டு வந்தன. ஆனால், அப்போது 'அரசியல் ஆர்வமோ, என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது' என்று உறுதியாக மறுத்துவந்தார் கிருஷ்ணபிரியா.

தற்போது, தமிழக அரசியலிலிருந்து சசிகலா குடும்பத்தினரை வேரறுக்கும் முயற்சிகள், ஒட்டுமொத்த அரசியல் களத்தையே சூடாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக இப்படியொரு போராட்டத்தை கிருஷ்ணபிரியா முன்னெடுக்க என்ன காரணம்? என்ற கேள்வியோடு அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்....

''தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 'ஆட்டிசம்' பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பல்வேறு பணிகளை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவருகிறார் கிருஷ்ணபிரியா. அவரது பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை சார்பாக, மெரினாவில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டபோதுதான், 'கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன்' என்ற பெயரே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

கிருஷ்ணபிரியா 2

வர்தா புயலின் பாதிப்பால், சென்னை மாநகரம் எண்ணற்ற மரங்களை இழந்துநின்றபோது, 'போன் செய்தால் புங்கை மரம்' என்று புதிய திட்டத்தை செயல்படுத்தினார். போன் செய்து வீட்டு முகவரியைச் சொன்னாலே போதும், அறக்கட்டளை சார்பாக 5 அடி உயர புங்கை மரக்கன்றை கொண்டுவந்து நட்டுவைத்துச் சென்றுவிடுவார்கள். அதுமட்டுமல்ல... அந்த மரக்கன்று மண்பிடித்து வளரும் வரையில் ஒருமாதம் வரையிலும் தண்ணீர் ஊற்றியும் பராமரித்தும் வந்தனர்'' என்று அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்துப் பேசியவர்களிடம், 'அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா இந்தப் போராட்டம்?' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

''அரசியலுக்குள் அடியெடுத்துவைக்கும் எண்ணம் இருந்தால், ஆரம்பம் முதலே அவரை அடையாளப்படுத்தியல்லவா பணிகளை மேற்கொண்டிருப்பார். அப்படியொரு எண்ணம் அவருக்குத் துளியும் கிடையாது. சென்னையில் வெள்ளப் பாதிப்பு வந்தபோதுகூட, தன் அறக்கட்டளை உறுப்பினர்களோடு அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளைச் செய்தார். அப்போதும்கூட அதுகுறித்த ஒரு புகைப்படச் செய்திகூட வெளிவராமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒரு விஷயத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் விரும்புவதில்லை. ஆனால், அனிதா மரணம் அவரது முடிவை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத எளிய கிராமத்தைச் சேர்ந்த ஏழைப்பெண் அனிதாவின் மரணம், தமிழக மக்கள் எல்லோரையுமே உலுக்கியெடுத்துவிட்டது; கிருஷ்ணபிரியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அனிதாவின் மரணம் அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான், நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டக் களத்துக்கே அவரை அழைத்து வந்துவிட்டது. இதைவைத்து தேவையற்ற சர்ச்சைகள், விமர்சனங்கள் எழலாம் என்பதையும் அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார்தான். அதனால்தான், 'சேவைக்கும் போராட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. நல்ல காரியங்களை பெயர் சொல்லாமல் செய்வதுதான் நியாயம். அதேபோல், நமது உரிமையை வென்றெடுக்க வேண்டிய இடத்தில், நம் அடையாளத்தை மறைத்துக் கொண்டிருக்கக்கூடாது' என்றவர், இம்முறை நேரடியாகப் போராட்டக் களத்துக்கே தலைமை தாங்க வந்துவிட்டார்.  

கிருஷ்ணபிரியா 3

இது அனிதாவுக்கு நேர்ந்த சோகமல்ல... ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமை. எனவே, இதற்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டுக்கொள்ளவேண்டாம்'' என்று ஒரேயடியாக மறுத்தவர்கள், கிருஷ்ணபிரியாவின் பேச்சுத் திறமையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ''சசிகலா குடும்பத்திலேயே நன்றாகப் பேசத் தெரிந்த ஒரே நபர் கிருஷ்ணபிரியாதான். தன்னம்பிக்கை சம்பந்தமான தலைப்புகளில் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்'' என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement