வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (18/09/2017)

கடைசி தொடர்பு:19:15 (18/09/2017)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாட்டுப்படகு மீனவர்கள்!

மீனவர்கள் முற்றுகை

விசைப்படகு மீனவர்களுக்குத் தங்குகடல் அனுமதி வழங்கக் கூடாது என தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுக்குள் காலை 5 மணி முதல் 9 மணிக்குள்ளாக மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்ப வேண்டுமென்று  மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மீன் பாடு இல்லாததால் பிடிக்கப்படும் மீன்கள் டீசலுக்கும் மற்ற மீன்பிடி வேலையாள்களின் கூலிக்கும் சரியாகிவிடுகிறது எனக் காரணம் காட்டி தங்குகடல் அனுமதி கோரி கடந்த சனிக்கிழமை விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  'விசைப்படகு மீனவர்களுக்குத் தங்குகடல் அனுமதி வழங்கக் கூடாது' என தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்திலும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளித்த பின் தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் கயாஸிடம் பேசினோம். ’’நாங்க அழிவில்லாத பாரம்பர்ய முறையில் மீன் பிடிச்சுட்டு வர்றோம். ஆனால், விசைப்படகுகள் கடல்வளத்தைச் சுரண்டி அழிக்கும் இழுவை மடி வலையைப் பயன்படுத்தி 700 முதல் 800 குதிரை திறன்கொண்ட இயந்திரங்களைப் பொருத்தி மீன் பிடிக்கின்றனர். விசைப்படகுகளின் நீளம் 35 மீட்டர் வரை உள்ளது. மீன்பிடி வலையின் ஒருகன்னி அளவு 4 மில்லிமீட்டருக்கும் குறைவாக உள்ளது. இது தடைசெய்யப்பட்ட மடி வலையாகும். இதனால் கடல்வளம் பாதிக்கப்படுகிறது.

நாட்டுப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்

இப்படியாக மீன்வளத்துறையின் எந்தவொரு சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படுவதுடன் நாட்டுப்படகு மீனவர்கள் விரிக்கப்பட்டுள்ள வலைகளும் அறுந்து சேதமாகின்றன. இப்படிச் சேதம் ஏற்படுத்திய பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளன. அரசுக் கட்டுப்பாட்டிலும் மீன்வளத்துறை இயக்குநர் கண்காணிப்பிலும் இயங்கும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளே அதிகம் உள்ளன.

தற்போது தங்களுக்கு மீன்பாடு இல்லை என்பதைக் காரணம் காட்டித் தங்குகடல் மீன்பிடிக்காக இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க இயலாத நிலை ஏற்படும். கடந்த வெள்ளிக்கிழமை விசைப்படகு மீனவர்கள் இரவில் மீன் பிடித்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இதே நிலை நீடித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும். அரசு தலையிட்டு மீன்வளத்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசைப்படகு மீனவர்களுக்குத் தங்குகடல் அனுமதி வழங்கக் கூடாது’’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க