வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (18/09/2017)

நெடுஞ்சாலையில் ஆபத்தான கல் மண்டபம்! அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைந்திருக்கும் கல் மண்டபத்தை 2 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகங்கையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த மனுவில், 'கடந்த 2015-ல் மத்திய அரசு மதுரை - ராமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக 1,387 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்புவனம் தாலுகா சாலையின் நடுவில் சிறிய பாழடைந்த கல் மண்டபம் ஒன்று உள்ளது. ஆனால், அதை அகற்றாமல், அதன் இரு பக்கமும் சாலை அமைத்து வருகின்றனர். ஆபத்தான வகையில் இருக்கும் அந்தக் கட்டடத்தை அறியாமல் புதிதாக அந்தச் சாலையைப் பயன்படுத்தும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆதலால், பெரும் விபத்து ஏற்படுத்துவதற்கு முன்பு திருப்புவனம் தாலுகா நான்கு வழிச்சாலையில் அமைந்திருக்கும் கல் மண்டபத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, திருப்புவனம் தாலுகா பகுதியின் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைந்திருக்கும் கல் மண்டபத்தைத் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் 2 வாரங்களில் அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.