தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் இழப்பு என்னென்ன?

தகுதி நீக்கம் பற்றி தினகரன் பேட்டி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராகக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

எனினும், சட்டமன்றத்துக்கு வெளியே ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வியும், கட்சிக் கொறடா உத்தரவு இல்லாமல் அவர்கள் ஆளுநரைச் சந்திக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக முன்னுதாரணம் ஏதும் உண்டா என்றும் நாம் சில மூத்த பத்திரிகையாளர்களிடம் விசாரித்தோம்.

"முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தார். அந்த நேரத்தில் சட்டசபை சபாநாயகராக மதியழகன் இருந்தார். அவர் எம்.ஜி.ஆர் ஆதரவாளராக இருந்ததால், சபாநாயகருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது.

முதலில் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, எம்.ஜி.ஆர். தரப்பில் கோரிக்கை விடுத்தபோதிலும், சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே துணை சபாநாயகர் சீனிவாசனுக்கு மற்றொரு இருக்கையைப் போட்டு, மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டுவந்தார். இதையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்று துணை சபாநாயகர் தெரிவித்ததும், எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எட்டுபேரும் சபையிலிருந்து வெளியேறினர். 'சட்டசபை செத்துவிட்டது. இனி முதல்வராகக்தான் இந்த சபைக்குள் வருவேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார் எம்.ஜி.ஆர். மதியழகனும் சபாநாயகர் பதவியை விட்டு விலகினார். அப்போதைய தி.மு.க. அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. 'இந்த நிகழ்வு முன்னுதாரணமாக ஆகி விடாதா?' என்று கருணாநிதியிடம் கேட்டபோது, 'ஆம். முன்னுதாரணமாகட்டும்' என்றார். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறுவிதமாக உள்ளது. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை" என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம், இதர படிகள் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடையாது. அவர்கள், எம்.எல்.ஏ. என்பதற்கான தகுதியை இழக்கிறார்கள். அவர்களின் தொகுதிகள் காலியானதாகவே கருதப்படும். எம்.எல்.ஏ-க்களுக்கான ரயில் பயணச் சலுகை, தொலைபேசிக் கட்டணம், தொகுதி வளர்ச்சி நிதி, எம்.எல்.ஏ-க்கான தொகுதி அலுவலகத்துக்கான செலவுத்தொகை உள்ளிட்ட எந்தக் கட்டணத்தையும் தமிழக அரசிடம் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு எம்.எல்.ஏ-வும் பெற முடியாது. சட்டமன்றக் கூட்டதொடரில் அவர்கள் பங்கேற்க முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு, தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் கணக்கிடப்படுவர். எனவே, நீதிமன்ற உத்தரவு வரும்வரை அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு இணையானவர்களாகவே கருதப்படுவர்.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளனர். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்திருப்பதற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், தங்களின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு பற்றி முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!