வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (19/09/2017)

கடைசி தொடர்பு:20:54 (19/09/2017)

மாணவர் அமைப்புத் தேர்தலுக்கான லிங்டோ பரிந்துரைகளும்... போட்டியிடாத ஜனநாயக மாணவர் சங்கமும்!

ஜே.என்.யு

ந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் எல்லாம் மாணவ அமைப்பின் பொதுக்குழுப் பதவிகளான தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் துறைகளுக்கான கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேரம் இது. கடந்த வாரங்களில் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), டெல்லிப் பல்கலைக்கழகத்திலும் மாணவ அமைப்புக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவ்விரண்டு பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-வில் பொதுக்குழுவின் நான்கு பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர்களும், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்குக் காங்கிரஸ் மாணவ அமைப்பான என்.எஸ்.யு.ஐ -வும், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளுக்குப் பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி-யும் வெற்றிபெற்றுள்ளன.

செப்டம்பர் 21-ல் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கான தேர்தல் (HCU) நடைபெறவுள்ளது. பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் இந்தத் தேர்தல், லிங்டோ கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்தக் கமிட்டியினால் பரிந்துரை செய்யப்பட்ட விதிகளுக்குப் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இதன் அடிப்படையில்தான் மாணவ அமைப்புத் தேர்தல் இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.

லிங்டோ கமிட்டி முன்னாள் நீதிபதி ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோவின் தலைமையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவ அமைப்புத் தேர்தலுக்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் கொடுத்த வரையறைகளுக்குட்பட்டு உருவாக்க மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டி, 2006 மே 23 அன்று இதன் பரிந்துரைகளை வழங்கியது. இதனை, உச்ச நீதிமன்றம் 2006 அக்டோபரில் மாணவ அமைப்புத் தேர்தலின் பொறுப்புகள், வெளிப்படைத் தன்மைகள், கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் ஆகியன எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுகுறித்து அறிமுகம் செய்தது. பின்வரும் அடிப்படைகளே அதன் முக்கியமான பரிந்துரைகளாக உள்ளன. அவை:

கால வரையறை: ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொடங்கிய ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

வேட்பாளர் வயது வரம்பு: இளங்கலை மாணவர்கள் என்றால், 17 முதல் 22 வரை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இந்த வயது வரம்பு நான்கு அல்லது ஐந்து ஆண்டுப் படிப்புகளாக உள்ள தொழில்முறைக் கல்லூரிகள் (அதாவது இன்ஜினீயரிங், மருத்துவம் போன்ற) என்றால் அதற்கேற்ப இருக்கும். முதுகலை மாணவர்கள் என்றால், 24 முதல் 25 வயதுடைய மாணவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆய்வு மாணவர்கள் என்றால், அவர்களுக்கான போட்டியிடுவதற்குரிய வயது வரம்பு 28. அவர்களுடைய மதிப்பெண்களும் முக்கியமான அங்கம் வகிக்கிறது. போட்டியிடும் மாணவர்கள் எந்த அரியரும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் பொதுக்குழுவில் ஒரு முறையும், கவுன்சிலர் பதவிக்கு இரு முறையும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

வருகைப் பதிவு: தேர்தலில் போட்டியிடும் மாணவர்களுக்கு 75 சதவிகித வருகைப் பதிவு இருக்க வேண்டும்.

புறக்கணிப்பு

குற்ற வழக்குப் பதிவு: போட்டியிடும் வேட்பாளர்மீது எந்தவித குற்றத்தின் கீழோ சட்டத்தை மீறியதாக எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல, அந்த மாணவர்மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.

வேட்பாளர் செலவு வரம்பு: ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

''இதில் குறிப்பிடப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளும் கல்வி நிறுவனங்களின் கல்விக்காக மட்டுமே. அரசியல் செய்வதற்கு அல்ல என்பதை வலியுறுத்துவதாக உள்ளன'' என்பது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தாக இருக்கிறது. பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களால் இப்பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் செயல்படும் மாணவ அமைப்புகள் தங்களுக்கான கொள்கைகளைத் தாங்களே வகுத்துக்கொண்டு செயல்படும் ஒரு சுய அமைப்புகள் ஆகும். ஒரு கல்வியாண்டின் முதல் ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தும்போது புதிதாக அக்கல்வி நிறுவனத்துக்குள் வரும் மாணவர்கள் அங்கே நிலவும் சூழலைப் புரிந்துகொண்டு தங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது கஷ்டமான ஒன்று. மேலும், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் குறைவு. தேர்தலின் ஒவ்வொரு பகுதியிலும் அலுவலகத்தின் தலையீடு இருப்பது போன்று அமைத்திருப்பது எல்லாம் மாணவர் அமைப்பின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் மாணவர்கள் அரசியல் தளங்களில் செயல்படாமல் தவிர்க்கும் செயலாகவும் மாணவர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

எனவேதான், இப்பரிந்துரைகள் அறிவிக்கப்பட்ட பின்னர், ஜே.என்.யு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை.ஹெச்.சி.யு-விலும் தேர்தலில் சில குளறுபடிகள் இருந்தன. தற்போதுவரை ஜனநாயக மாணவர் சங்கம் (Demactractic Student Union – DSU), ''இப்பரிந்துரைகளை நீக்கும்வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை'' என்ற முடிவில் இருக்கிறது. இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயேதான் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.


டிரெண்டிங் @ விகடன்