'18 தொகுதிகள் காலி' - தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச் செயலாளர் கடிதம் | Assembly secretary notifies vacancies in 18 constituencies following disqualification of dissident MLAs

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (18/09/2017)

கடைசி தொடர்பு:08:22 (19/09/2017)

'18 தொகுதிகள் காலி' - தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச் செயலாளர் கடிதம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் எழுதியுள்ளார்.

எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி கடந்த மாதம் இணைந்தது. இதையடுத்து, தினகரன் அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது. இதுதொடர்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழக சட்டசபை


இதனால் அ.தி.மு.க அணிகளுக்கிடையேயான மோதல் நாளுக்குநாள் வலுத்துவந்தது. இதனிடையே, கொறடாவின் அனுமதியின்றி ஆளுநரைச் சந்தித்ததற்காக அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, சபாநாயகர் தனபாலுக்கு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையன், எடப்பாடி அணிக்கு மாறினார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து இன்று காலை உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.

இதையடுத்து, தற்போது தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக, தேர்தல் ஆணையத்துக்குப் பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் எழுதியுள்ளார். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பெயர்களை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பூபதி கூறியுள்ளார்.