வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (18/09/2017)

கடைசி தொடர்பு:08:07 (19/09/2017)

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது அரியலூர் நீதிமன்றம்.

                  


அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மனப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் சீனிவாசன். 2008-ம் ஆண்டு டிசம்பா் 15-ம் தேதி பட்டா மாற்றம் செய்ய விஸ்வநாதன் என்பவர் அணுகியுள்ளார். பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும் என்று சொல்ல, சும்மா வேலை பார்க்க நான் உன் வீட்டு வேலைக்காரனா என்று கேட்டுள்ளார். அதற்கு கோபமான விஸ்வநாதன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை அணுகியிருக்கிறார். அதற்கு அவர்கள் கொடுத்த 1500 ரூபாய் பணத்தை சீனிவாசனுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கையும் களவுமாகக் கைதுசெய்தனர்.

                   

  
 

இந்த வழக்கு விசாரணை  அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், வழக்கை  விசாரித்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து சீனிவாசனை போலீஸார் திருச்சி மத்தியச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனா்.