Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தியாகிகளால் அதிகாரத்தைக் கையாள முடியாது!" - கி.ராஜநாராயணன்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 95 வயதை நிறைவு செய்திருக்கிறார். தமிழகத்தின் தெற்கே 'இடைச்செவல்' கிராமத்தில் இருந்து எழுத வந்த ராஜநாராயணன் கரிசல் தமிழை எழுத்துலகில் அறிமுகம் செய்தவர். நடிகர் சிவக்குமார், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பழ.நெடுமாறன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட 'கி.ரா.95' என்கிற விழா நடைபெற்றது. இதில் நிறைவாக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பேசியது..  

கி.ராஜநாராயணன்

"சொல்லவேண்டிய செய்திகள் எல்லாம் என் எழுத்தில் இருக்கிறது. இனி சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. பெரியார் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால், அவர் அதைச் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அவர் இருக்கும் வரை சந்தோஷமாக மக்களைச் சந்திக்கவும், அவர்களிடம் பேசவும் காலத்தை செலவிட்டார். இடைசெவல் அருகில் உள்ள ஊர் வாழைத்தான். காங்கிரஸ் செல்வாக்காக இருந்த ஊரில் திடீரென்று அதை வெறுத்துவிட்டார்கள். நிறையப் பேருக்கு அப்படி ஆகும். அந்த ஊரில் முக்கிய பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து 'எங்க ஊரில் ஒரு வாரம் தங்கி கம்யூனிச பிரசாரம் செய்யுங்க'ன்னார்.

அவர் கேட்டுக்கொண்டபடி அந்த ஊருக்கு சீனிவாசராவ், ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் வந்துட்டாங்க. அன்னைக்கு இருந்த கம்யூனிஸ்ட்களுக்கு காக்கி ட்ரவுசர் மேல் அப்படி ஒரு ஆசை. எல்லோரும் காக்கி ட்ரவுசரோடதான் இருப்பாங்க. ஜீவா கூட இடையில் வேட்டிக்கு மாறிட்டார். ஆனால், சீனிவாசராவ் கடைசி வரை காக்கி ட்ரவுசரோடதான் இருந்தார். அந்த சீனிவாசராவிடம்தான் நான் முதல் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கினேன். அந்த ஊரே அழைத்துப் பிரசாரம் செய்யச்சொன்ன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டையில் 'உடைக்கவே முடியாதது' என்கிற பொருள் வரும் வகையில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அதை உடைக்கவும் ஆள் வந்தது. இரண்டாக உடைந்த கட்சி இன்று ஆயிரமாக உடைந்து போய்விட்டது. ஒருவாரம் நடப்பதாக இருந்த கம்யூனிச பிரசாரம் ஊர்மக்களின் வரவேற்பால் 20 நாளைக்கும் மேலாக நடந்தது. இருந்தாலும் அந்த ஊரில் ஒருவர் கூட கம்யூனிஸ்டாக மாறவில்லை.

கி.ராஜநாராயணன்

பிரசாரத்தை வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து கிராமமான வில்லிச்சேரியில் கூட ஓரிருவர் கம்யூனிஸ்டாக மாறிவிட்டார்கள். இருந்தாலும் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து வேலைசெய்தனர். அவர்களால் மக்கள் பணியில் இருந்து விலகமுடியாது. இதோ அருகில் இருக்கும் நல்லகண்ணு நாளைக்கு முதல்வராகிவிட்டால் அவரால் செயல்படமுடியாது. நாணயமிக்கவர்களால் பதவியில் இருக்கவே முடியாது. சோவியத் புரட்சி முடிந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின் லெனின் சோகமாகக் காணப்பட்டார். காரணம் கேட்டபோது 'நாம் (போல்ஷ்விக்குகள்) ஆட்சிக்கு வந்துவிட்டோம். ஆனால், நாம் சொல்வதை செயல்படுத்தப்போவது ஏற்கெனவே இருந்த அதிகாரிகள்தானே. அதுதான் கவலைக்கு காரணம்' என்று சொன்னாராம்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருக்கமுடியவில்லை. ஆனால், என் இருபக்கமும் அமர்ந்திருக்கும் நல்லகண்ணுவும், நெடுமாறனும் தியாகிகள். மக்களின் மனதில் என்றும் இருப்பார்கள். அவர்கள் விரும்புவதும் அதைத்தான். பதவியையும் அதிகாரத்தையும் விரும்புபவர்கள் அல்ல. அடுத்ததாக நடிகர் சிவக்குமார் குறித்தும் சொல்லவேண்டும். இவரின் வாரிசுகள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை நல்ல காரியத்துக்குச் செலவு செய்கிறார்கள். எத்தனை பேர் இப்படிச் செய்கிறார்கள்?

கி.ராஜநாராயணன்

சென்னையில் உள்ள எழுத்தாளன் யாருக்காவது பிரச்னை என்றால் இவர்கள் உடனே உதவி செய்கிறார்கள். சிவக்குமார் கம்பராமாயணத்தை பேசுவதைப் போல சிலப்பதிகாரத்தையும் பேச வேண்டும். அவரிடம் சொல்லுங்கள் என்று என்னிடம் சிலர் கேட்டுக்கொண்டனர். ராமாயணம், மகாபாரதத்தைவிடச் சிலப்பதிகாரம் நம்முடைய இலக்கியம் என்று மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்." என முடித்தார் கி.ராஜநாராயணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement