'18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கியது நீக்கியதுதான்': சண்முகநாதன் எம்.எல்.ஏ பேச்சு

’’சபாநாயகர் 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்தது செய்ததுதான். சபாநாயகரின் தீர்ப்புதான் இறுதியானது’’ என ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் தெரிவித்துள்ளார். 

shanmuganathan MLA

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளம்  - கொங்கராயக்குறிச்சி ஆற்றுப்பாலப் பணியைப் பார்வையிட வந்திருந்தார் எம்.எல்.ஏ. சண்முகநாதன். பாலப் பணிகளைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ இந்தப் பகுதி மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையான கருங்குளம் – கொங்கராயக்குறிச்சி இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தில் தற்போது 90 சதவிகித பணி முடிந்துள்ளது. மீதமுள்ள 10 சதவிகிதப் பணி இரண்டு மாதத்துக்குள் முடிக்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியே இப்பாலத்தைத் திறந்து வைப்பார். இந்தப் பாலத்தினால் நாகர்கோவில் முதல் தூத்துக்குடி வரையிலான போக்குவரத்துக்கு சுலபமாக அமையும்’’ என்றவரிடம், 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் குறித்து கேட்டபோது, ‘’சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சபாநாயகருக்கு அனைத்து எம்.எல்.ஏ-க்களுமே கட்டுப்பட்டவர்கள். கொறடா என்ன சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் சபாநாயகரின் கடமை. சபாநாயகரின் 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. இதற்குத் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. சபாநாயகரின் இந்தத் தீர்ப்பே இறுதியானது. 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தது செய்ததுதான். 

பாலத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ சண்முகநாதன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலும் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டம்தான் உண்மையான கூட்டம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு, மூன்று பேர்தான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், தீபாவும், தினகரனும் பொதுக்குழுவைக் கூட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நாய்களும் பேய்களும் கூட்டுவதாகச் சொல்லும் கூட்டம் பொதுக்கூட்டமல்ல. அ.தி.மு.க-வில் 95 சதவிகிதத்தினர் எங்கள் பக்கம்தான் உள்ளனர். ’’ எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!