Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஸ்லீப்பர் செல்’ எம்.எல்.ஏ-க்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்காமல் சமாளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான ’ஸ்லீப்பர் செல்’ எம்.எல்.ஏ-க்கள் குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் சமாளித்தார், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். 

ஸ்லீப்பர் செல் பற்றி அமைச்சர் பதில்

நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’கடந்த 2014-ல் அம்மாவால் இந்தக் கால்நடைக் கல்லூரி புதிதாகக் கட்டப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

விவசாயிகளின் வாழ்வு மேம்படும் வகையில், கால்நடைத் துறையின் மூலமாக கோழிக்குஞ்சு வளர்ப்புக்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இங்கு குஞ்சு பொறிப்பகம் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 1000 குஞ்சுகளை இங்கு பொறிக்க வைக்க முடியும். அதை விவசாயிகளுக்கு வளர்ப்பதற்கு வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5000 விவசாயிகளுக்குக் கோழிப்பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

அமைச்சர் ஆய்வு

தற்போது தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மா விட்டுச் சென்ற பணிகளை முதல்வரும் துணை முதல்வரும் சிறப்பாக மேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார்கள். தமிழக மக்களின் நலனுக்காக அம்மா தன் உடலை வருத்திப் பணியாற்றினார். ஏழை, எளிய மக்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் ‘விஷன் 2023’ என்ற திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டார். அதைத் தற்போது இருக்கும் அரசு நிறைவேற்றி வருகிறது. 

எங்களிடம் தேவையான அளவுக்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதனால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அடுத்த மூன்றரை ஆண்டு காலத்தையும் தொய்வில்லாமல் இந்த ஆட்சி கடக்கும்’’ என்றவரிடம், டி.டி.வி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 13 பேர் ’ஸ்லீப்பர் செல்’களாக இந்த ஆட்சியில் இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறாரே? எனக் கேட்டதற்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்து ஏதேதோ பேசினார். ’எங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்குமே அம்மாவின் இந்த ஆட்சி தொடர்ந்து நடக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கிறது. பெரும்பான்மை இருப்பதால் அரசு தொடர்ந்து நீடிக்கும்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement