வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (19/09/2017)

கடைசி தொடர்பு:10:41 (19/09/2017)

போராட்டத்தில் பங்கேற்ற முகிலன் எங்கே? போலீஸ் அழைத்துச்சென்றதால் பதற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அணு உலை எதிர்ப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான முகிலன், போலீஸாரால் பிடித்துச்செல்லப்பட்ட நிலையில், இதுவரை அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிவிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகிலன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தாமிரபரணி ஆற்றிலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் அவற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் பங்கேற்ற போராட்டம், நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் ஆடு, மாடுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சித்தனர். 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் தெஹ்லான் பாகவி, பச்சைத் தமிழகம் கட்சியின் மாநில அமைப்பாளர் சுப.உதயகுமாரன், அணுஉலை எதிர்ப்பாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை வழிமறித்த போலீஸார், வழியிலேயே கைதுசெய்து புதுக்குடி கல்யாண மண்டபத்தில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

இதையடுத்து, காரில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த முகிலனை ஆழ்வார்திருநகரி அருகே போலீஸார் மடக்கிக் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இரவு முழுவதும் அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை போலீஸார் ரகசியமாக வைத்தனர். காலையிலும் அவரைப் பற்றி எந்த காவல்நிலையத்தில் கேட்டாலும் தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் அச்சம் அடைந்த சமூக ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார்செய்தனர். 

கூடங்குளம் அணுஉலை போராட்டத்தின்போது தொடரப்பட்ட ஏராளமான வழக்குகளில் முகிலன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதில் 13 வழக்குகள் தொடர்பாக ஏற்கெனவே வள்ளியூர் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதை ஏற்று சுப.உதயகுமாரன், புஷ்பராயன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால், முகிலன் ஆஜராக மறுத்துவிட்டார். இதையடுத்து, அவருக்கு வள்ளியூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் அரெஸ்ட் வாரண்ட் காரணமாக, அவரை போலீஸார் கைதுசெய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும், அதை முகிலனின் குடும்பத்தினருக்கு முறைப்படி தெரியப்படுத்தாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவரை விசாரணை என்கிற பெயரில்  ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் சித்ரவதை செய்யக்கூடுமோ என்கிற சந்தேகம், சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், அடுத்த கட்டமாக சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசித்துவருகின்றனர்.