’பேரறிவாளன் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு! | ’should extend perarivalan's parole', asks Arputhammal

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (19/09/2017)

கடைசி தொடர்பு:11:32 (19/09/2017)

’பேரறிவாளன் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

அற்புதம்மாள்

ராஜீவ் கொலைக் குற்றத்துக்காக, கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தார். அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க, தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. திருப்பத்தூர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துள்ள அவரைப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்துப் பேசிவருகின்றனர்.

இந்நிலையில், பரோல் காலம் முடிய இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.