Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நாங்க ஏமாந்துட்டோமா சார்?”... கிராமசபைகளுக்கான பயணம் முன்வைக்கும் கேள்விகள்?!

கிராமசபை, gramsabha

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு, அதைத்தொடர்ந்து அரசியல் வானில் ஏற்பட்டு வரும் தள்ளாட்டம் என விழிபிதுங்கி நிற்கிறது தமிழ்நாடு. மாநில நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் என அடிப்படை ஸ்திரத்தன்மையே ஆட்டம் கண்டுவருகிறது. இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக தமிழகம் முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்கள், சென்ற வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து காலியாகவே இருந்துவருகின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை. 'காலாவதியான' கவுன்சிலர்கள் ஜபர்தஸ்த்தாக அவரவர் வார்டுகளில் இன்றும் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல ஊராட்சிகளுக்கு ஒரேயொரு சிறப்பு அலுவலர் மட்டுமே இருக்கிறார். இதுபோன்ற சறுக்கல்களால், தமிழகத்தில் உள்ளாட்சிப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன. மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட தலைகீழாக நிற்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல கிராமப் பஞ்சாயத்துகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் சுமார் 12,524 கிராமங்களில், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விதிவிலக்காக சில கிராமங்களில் இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. கிராம மக்களுக்கு பயன்தரும் இந்த கிராமசபைக் கூட்டங்கள், வெறும் கண்துடைப்புக்காக அல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக களமிறங்கியது ‘உள்ளாட்சி உங்களாட்சி’ அமைப்பு. 'முகவரி அறக்கட்டளை', 'தோழன் அமைப்பு', 'சட்டப்பஞ்சாயத்து இயக்கம்', 'தாம்பரம் மக்கள் குழு', 'தருமபுரி மக்கள் குழு' எனப் பல்வேறு அமைப்புகளும் கைகோத்து இந்த விழிப்புஉணர்வுப் பிரசாரங்களை முன்னெடுத்தனர். ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர்கள், பொதுமக்களையும், சமூகப் பணியாற்றிவரும் அமைப்புகளையும், தன்னார்வலர்களையும் நேரில் சந்தித்து, கிராமசபைக் கூட்டம் குறித்த விவரங்களை எடுத்துரைத்தனர். தற்போது, இவர்கள் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணத்துக்காகத் தயாராகி வருகின்றனர். 

கிராமசபை, gramsabha

தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட “உள்ளாட்சி உங்களாட்சி” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமாரிடம் பேசியபோது, தங்கள் பயணத்தின் அனுபவங்கள்குறித்து விரிவாக கலந்துரையாடினார். “தங்கள் கிராமத்தில் சமூகப் பணிகள் மேற்கொள்ளும் இளைஞர்களுக்குக் கிராமசபை என்பது ஒரு வரப்பிரசாதம்தான். சிவகாசி ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்தில் உள்ள தெற்கு ஆனைக்கூட்டம் கிராமத்திலும் அப்படித்தான் நடந்தது. 'விதை இயக்கம்' என்ற பெயரில் தங்கள் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, பாரம்பர்ய மரங்களை நடுவது, பனை நடுதல் எனத் தொடர்ந்து இயங்கி வரும் இளைஞர்களை இப்பயணத்தில் சந்தித்தோம். அக்கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், மக்களின் சந்தேகங்களுக்குப் பதில்சொல்லத் தயங்கிய எழுத்தரிடம் ஒரு இளைஞர், ‘உங்களிடம் கேள்விகள் கேட்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நமது ஊருக்காகத்தான் கேட்கிறோம். மேலும், இனி யார் பஞ்சாயத்தின் பொறுப்புக்கு வந்தாலும், நாங்கள் கிராமசபையில் தவறாமல் பங்கெடுத்து மக்களுக்குத் தெரியவேண்டிய தகவல்களைக் கேட்டுப்பெறுவோம்’, என உறுதியாகவும், ஜனநாயகத் தன்மையோடும் சொன்னதும் வேறு வழியில்லாமல் மக்கள் கேட்ட தகவல்கள் அங்கே விளக்கப்பட்டன. 

கிராமசபை, gramsabha

சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டிக்கு பக்கத்து ஊர் கச்சிராயன்பட்டி. அங்குள்ள பெண்களிடம் நாங்கள் கிராமசபைக் கூட்டம் பற்றி விளக்கியபோது, ‘நாங்க போடுற கையெழுத்துக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கும்னு நாங்க நினைக்கல. கிராமசபைக்கு நாங்க போகலன்னாலும் எங்களை தேடிவந்து கையெழுத்து ஏன் வாங்குறாங்கன்னு இப்பதான் புரியுது. இத்தன நாளா நாங்க ஏமாந்துட்டோமா?’, என்றனர் அப்பாவிகளாக. கிராமசபைக் கூட்டம் பற்றி நாங்கள் காண்பித்த காணொலிகள் அவர்களை ஈர்த்தது. 30 நாள் பயணத்தில், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களைச் சந்தித்தது எங்கள் குழு. இப்பயணம் ஒரு குழுசெயல்பாடு எனச் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, 'நல்ல சோறு' ராஜமுருகன், 'வானகம்' பாஸ்கர் ஆறுமுகம், 'தாம்பரம் மக்கள் குழு' பாரதி கண்ணன், ‘நம்மாழ்வார் உயிர்சூழல்' நடுவமான வானகத்தில் ஆறு மாத கால பயிற்சி எடுத்து வரும் இளைஞர்கள் எனப் பலரின் அனுபவங்களும், கிராமசபை பற்றிய கருத்துகளும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. கிராமசபை என்ற அமைப்பை மக்களிடம் கொண்டுசேர்ப்பது எங்கள் தொடர் பணியாக இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன். 

கிராமசபை, gramsabha

இந்தப் பயணத்திலிருந்து இவர்கள் விவரிப்பது, பெரும்பாலான கிராமங்களில் வாழும் மக்களுக்குக் கிராமசபை பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூடத் தெரியாமல் இருப்பதைத்தான். கிராமசபைகள் சட்டப்படி அமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்களுக்கு அதன் அடிப்படைத் தகவல்களைக் கூடத் தெரியப்படுத்தாமல் அல்லது போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தாமல் இருப்பது வியப்பிற்குரியதே. எந்தெந்த தேதிகளில் கிராமசபைக் கூட்டம் கட்டாயம் நடக்கும்? அல்லது நடக்கவேண்டும்?, கிராமசபையில் யார்யார் எல்லாம் கலந்து கொள்ளலாம்?, சிறப்பு கிராமசபைக் கூட்டம் என்றால் என்ன? அதனை எப்படிக் கூட்டுவது?, கிராமசபையில் மக்கள் முன் வைக்கப்படவேண்டிய ஆவணங்கள் என்னென்ன?, கிராமசபையின் தலைவர் யார்?, கிராமசபை தீர்மானம் என்றால் என்ன? அதை எப்படி இயற்றுவது? முன்னுதாரணமான கிராமசபை என்றால் எப்படி இருக்கும்? எனப் பல அடிப்படை விஷயங்களை மக்களுக்கு நேரடியாக விளக்கியது இவர்கள் பயணத்தின் சாதனை. விரைவில் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்க இருக்கும் இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement