வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (19/09/2017)

கடைசி தொடர்பு:13:35 (19/09/2017)

கொசு உற்பத்திக்கு விருது! மாநகராட்சியைக் கலாய்த்துப் போராட்டம்!

கொசு உற்பத்தியில் சாதனை படைத்ததாக நெல்லை மாநகராட்சிக்கு விருது அறிவித்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

தமிழக அரசால், நெல்லை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாகத் தேர்வுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத இந்த மாநகராட்சியை எப்படித் தேர்வுசெய்தார்கள்? எனப் பொதுமக்கள் வியந்துபோய் இருக்கிறார்கள். ஒருவேளை, பிற மாநகராட்சிகள் இதைவிடவும் மோசமாக இருக்குமோ என்கிற கவலையும் சமூக ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது. குப்பைகள் நிறைந்து காணப்படும் மாநகராட்சியைத் தூய்மைப்படுத்தி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாநகரப் பகுதியில் குப்பைகள் கொட்டிக்கிடப்பதாலும், கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல், கழிவுநீர் ஓடைகளாகத் தேங்கிக் கிடப்பதாலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. அவற்றைத் தடுக்கத் தவறிய மாநகராட்சியைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கொசுவலையைப் போர்த்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அத்துடன், ’கொசு உற்பத்தியில் சாதனை படைத்த மாநகராட்சி’ என்ற விருதுக்கு உரிய சான்றிதழையும் கோப்பையையும் கையோடு கொண்டுவந்திருந்தனர்.

நூதன ஆர்ப்பாட்டம்

கொசுவலை, கொசுவத்திச் சுருள் ஆகியவற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த நூதன ஆர்ப்பாட்டம்குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டத் துணைத் தலைவரான ராஜேஷிடம் கேட்டதற்கு, ’’நெல்லை மாநகராட்சி நிர்வாகம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல், பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி மையமாக இருக்கும் சாக்கடைகள், கழிவுகளைத் தூய்மைப்படுத்துவதை விட்டுவிட்டு, கொசுமருந்து அடிப்பதாகச் சொல்லி பணத்தைச் சுருட்டுகிறார்கள். 

கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்காமல், கொசுமருந்து அடித்ததாக கணக்குக் காட்டி பல லட்சம் மோசடி நடந்துள்ளது. அதனால், இந்த மாநகராட்சியின் அவலத்தைச் சுட்டிக்காட்டும்வகையில் கொசுவலைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம். அத்துடன், மாநகராட்சிக்கு கொசு உற்பத்தியில் சாதனை படைத்ததாக விருது வழங்கினோம். நெல்லை டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்களால் பரவும் நோயைக் கட்டுப்படுத்த, இனியாவது மாநகராட்சி நிர்வாகம் விழிப்புடன் செயல்பட வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.