வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (19/09/2017)

கடைசி தொடர்பு:13:34 (19/09/2017)

18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் நீக்கம்... அரசில், அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?

 

எடப்பாடி, ஓபி.எஸ். தினகரன்

மிழக  அரசியலில் இதுநாள் வரையிலும் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தெளிவு கிடைக்கும் நேரம் நெருங்கிவருகிறது. ஆம்... யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தடாலடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

''பொய் சொன்னதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்'' என்று காரணம் சொல்கிறார் சபாநாயகர் தனபால். அதாவது, புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நண்பர்களது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக பொய் சொல்லிவிட்டார்களாம். மேலும், இரண்டு காரணங்களையும் தகுதி நீக்கத்துக்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் சபாநாயகர். 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மாஃபா.க.பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குப் பிடிக்கவில்லை' என்பதும்தான் அந்தக் காரணங்கள்.

தகுதி நீக்கத்துக்கான காரணங்களை சபாநாயகர் தெரிவித்ததையடுத்து, எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. தகுதி நீக்கம் சரியா, தவறா, ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்றெல்லாம் விவாதங்கள் சூடு பறக்கின்றன. 

'தான் சார்ந்திருக்கிற அரசியல் கட்சியிலிருந்து விலகிவிட்டாலோ அல்லது சட்டசபைக்குள் தன் கட்சியின் கட்டளையை மீறி செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்ட உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படுவது உண்டு' என்று சட்டவிதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் டி.டி.வி தரப்பு, சபாநாயகரின் இந்த உத்தரவே செல்லாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். கூடவே, தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது எனக்கூறி நீதிமன்றப் படியேறுகின்றனர் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்விதான் இப்போதைய பரபரப்பாக இருக்கிறது. தமிழக சட்டசபையில் தற்போதுள்ள சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், (நீதிமன்றத் தடை நீங்கி) அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே முடியும். அதாவது மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஜெயலலிதா மறைவையடுத்து மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது 233-ஆக உள்ளது. தற்போது 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இந்த மொத்த எண்ணிக்கை என்பது 215-ஆக சுருங்கிவிடுகிறது. இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 108 எம்.எல்.ஏ-க்களே போதும். எனவே, எளிதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வென்றுவிட வாய்ப்புள்ளது. டி.டி.வி தினகரன் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், தீர்ப்பைப் பொறுத்து இந்தக் கணக்குகளில் மாற்றங்களும் நிகழ வாய்ப்புள்ளது. 

மாறாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், 19 தொகுதிகளில் (ஆர்.கே. நகர் தொகுதி) வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும் சூழலும் ஏற்படும். அ.தி.மு.க-வில் நடக்கும் குளறுபடிகள் தி.மு.க-வுக்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். 

ஸ்டாலின்

இதற்கிடையில், 'சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடவேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டு முறை கடிதம் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை' என்று குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 20-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் என்னவிதமான தீர்ப்பு வரும் என்பதைப் பொருத்தும் இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படலாம். 

கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தொடர்ந்து இப்போது 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ஐ நெருங்கிவிட்ட நிலையிலும்கூட தமிழக அரசியல் நிலவரம் பிரேக்கிங் நியூஸ்களாகவே கடந்துவருகின்றன. விரைவிலேயே நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புவோம்!


டிரெண்டிங் @ விகடன்