புரட்டாசி மஹாளய அமாவாசை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

புரட்டாசி மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
 இந்துக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக, அமாவாசை நாள்களில் திதி கொடுத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் தை, மாசி, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள், சிறப்புபெற்ற தினங்களாகும். அதன்படி, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில், மறைந்த முன்னோர்களான தாய், தந்தை, தாத்தா, பாட்டி மட்டுமல்லாது உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பூமிக்கு வருவதாகவும், பூமியில் வாழும் தங்கள் உறவினர்கள் அளிக்கும் சிறப்பு பூஜையால் திருப்தி அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்துக்கள், நாடு முழுவதும் உள்ள கடல், ஆறு, நதி, அருவி என அனைத்து நீர் நிலைகளிலும் நீராடி, தங்கள் முன்னோர்களை வழிபடுகின்றனர்.

மஹாளய அமாவாசை தினத்தில் தீர்த்தமாடிய பக்தர்கள்

புனித ஸ்தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில், மஹாளய அமாவாசை தினமான இன்று, புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர்.

பின்னர், சுவாமி-அம்பாளை தரிசனம்செய்து, தங்கள் விரதத்தை நிறைவேற்றினர். இதையொட்டி, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் நகர் முழுவதும் போக்குவரத்து வழிகள் மாற்றியமைக்கப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. கோயிலில் தீர்த்தமாட வரும் பக்தர்களின் வசதிக்காக,  கோயிலின் ரத வீதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், அக்னி தீர்த்தம், கீழவாசல், கோயிலின் உட்புறங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அமாவாசை தினத்தை முன்னிட்டு, தனியார் அமைப்புகள், தனிநபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!