நேரமும் சூழ்நிலையும் சரியில்லை: தவிக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் #VikatanExclusive

தினகரன்

கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், 'திருச்சியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை' என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'அவர்கள், தமிழகத்துக்கு வந்தால் சிக்கல் என்று கருதுவதோடு, தங்களுக்கு நேரமும் சூழ்நிலையும் சரியில்லை' என்ற விரக்தியில் இருப்பதாகவும் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வலியுறுத்தி தினகரனை ஆதரித்த 19 எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். இதற்கு, எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் சபாநாயகரை நேரில் சந்தித்து, விளக்கமளித்தார். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின்படி தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். எம்.எல்.ஏ பதவி பறிபோன வருத்தத்தில் அவர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடக்கிறது. முன்னதாக, கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் பொதுக்கூட்டத்துக்கு வருவதாக, தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அறிவித்திருந்தார். தற்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், திருச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கர்நாடக சொகுசு விடுதியிலிருந்து திருச்சிக்கு அவர்கள் புறப்படாமல், அவரவர் அறைகளில் உள்ளனர். அடுத்தகட்ட ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தினகரனை ஆதரித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்

இதுகுறித்து கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். "திருச்சிப் பொதுக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி, கட்சியில் எங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டிருந்தோம். கூட்டத்தில் நாங்களும் பங்கேற்க முடிவுசெய்திருந்தோம். தற்போது, எங்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் வருத்தத்தில் உள்ளனர். தகுதிநீக்க உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். அதில், எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டால், பெருபான்மையை நிரூபிக்கும் பலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்துவிடும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் பழனியப்பன், செந்தில்பாலாஜி எனச் சிலரைக் கைதுசெய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டுகின்றனர். இதற்காக, பழைய வழக்குகள் எல்லாம் தூசிதட்டி எடுக்கப்பட்டுள்ளன. அதைச் சட்டரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையும் நேரமும் எங்களுக்குச் சாதகமாக இல்லை. இதனால்தான் தமிழகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடிவுசெய்துள்ளோம். கர்நாடக சொகுசு விடுதியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், திருச்சிக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை. ஆனால், மற்ற இடங்களில் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதுதவிர, தமிழகம் முழுவதிலுமிருந்து தினகரன் ஆதரவாளர்கள் திருச்சிக் கூட்டத்தில் பங்கேற்று, மிகப்பெரிய மாஸ் காட்ட உள்ளனர்.

பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்க, சிறைத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் தினகரன் தலைமையில் நாங்கள் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். எங்களைத் தகுதி நீக்கம், கைது என்று மிரட்டினாலும் தினகரனை விட்டுப் பிரிந்துசெல்ல மாட்டோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று இன்னும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யட்டும். அதன்பிறகு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!