வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (19/09/2017)

கடைசி தொடர்பு:12:55 (19/09/2017)

’கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்’- தினகரனை விளாசும் ஜெயக்குமார்

தினகரன், கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,’ நானும் சட்டப்பேரவைத் தலைவராக இருந்துள்ளேன். சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்குட்பட்ட முடிவு. அதுகுறித்து நான் கருத்து கூறுவது உரிமை மீறல் தொடர்பானது. ஆகவே, இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அணியில் 12 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தினகரன் கூறியது குறித்து பேசிய அவர்,’ தினகரன் கண்கெட்டபிறகும் சூரிய நமஸ்காரம் செய்துவருவதாகக் குறிப்பிட்டார். நவோதயா பள்ளிகள் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.