வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (19/09/2017)

கடைசி தொடர்பு:12:59 (21/09/2017)

''ரூல்ஸ்செல்லாம் தெரியாது; ஓனரிடம் பேசிக்கங்க...'' ரயில்வேயை அதிரவைக்கும் வசூல் வேட்டை

central railway station toilet

''ரயில்வே விதியை மீறி, ஏன் இவ்வளவு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறீர்கள்'' என்று கேட்டபோது, ''ரூல்ஸ்செல்லாம் தெரியாது; ஓனரிடம் பேசிக்கங்க'' என்று கூலாகப் பதிலளித்தார், வசூல் வேட்டை நடத்தியவர்.

அரக்கோணம், திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த ரயில்களில், ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் பயணம்செய்து அலுவலகத்துக்கும் மற்ற பணிகளுக்கும் செல்கின்றனர். அவசரத்துக்கு ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறையைப் பயணிகள் பயன்படுத்திவருகின்றனர். இந்தக் கழிப்பறையை, டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்துவிடுகிறது ரயில்வே நிர்வாகம். கழிப்பறையில் மலம் கழிக்க 5 ரூபாயும் சிறுநீர் கழிக்க 2 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் ரூல்ஸ். ஆனால், இந்தக் கட்டணத்தை யாரும் வசூலிப்பதில்லை. தங்கள் இஷ்டம்போல பயணிகளிடம் கட்டணம் வசூலித்துவருகிறார்கள், டெண்டர் எடுத்தவர்கள். வசூலிக்கப்படும் கட்டணம்பற்றி போர்டு வைக்கப்படுவதில்லை.

சென்னை 'பூங்கா ரயில்' நிலையத்தில், கட்டணக் கழிப்பறை செயல்பட்டுவருகிறது. இங்கு மலம், சிறுநீர் கழிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற போர்டும் கிடையாது. இந்தக் கழிப்பறையில் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டு வந்தபோது, எவ்வளவு ரூபாய் என்று கேட்டுள்ளார். கட்டணம் வசூலிப்பவர், 10 ரூபாய் என்று கூறியுள்ளார். இவ்வளவு தொகை வசூலிக்க வேண்டுமென்று ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கிறதா என்று கேட்டபோது, ''ஏழு ரூபாய் கொடுங்க'' என்றார். விடாப்பிடியாகக் கேட்க, 5 ரூபாய் கொடுத்தார் அந்த நபர்.

கட்டணத்தை வசூல்செய்த நபரிடம் பேசியபோது, ' ரூல்ஸ்செல்லாம் எனக்குத் தெரியாது. எதுவா இருந்தாலும் ஓனரிடம் பேசிக்கங்க' " என்று கூறிவிட்டு வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வணிகத்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம் அல்லது அங்குள்ள புகார் புத்தகத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்" என்று கூறினார்.

வீடியோவை காண க்ளிக் செய்க...