Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று சென்னை வருகை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னவெல்லாம் செய்யக்கூடும்?

ராஜ்நாத் சிங்குடன் வித்யாசாகர் ராவ்

ரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை சென்னை வருகிறார்.

தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.எச். வித்யாசாகர் ராவ், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சென்னை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றிவரும் நிலையில், அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள சூழலில் ஆளுநரின் இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வித்யாசாகர் ராவ்ஆளுநர்  நேற்றே சென்னை வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுநர், உள்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது ஆளுநர் முன் உள்ள சவால் என்றால், "மெஜாரிட்டியை இழந்துள்ள எடப்பாடி அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என்று  உத்தரவிட வேண்டும். சட்டசபைக் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சட்டசபையைக் கூட்டும் அதிகாரம் அரசியல் சாசன சட்டப்படி ஆளுநருக்கே உள்ளது. ஏற்கெனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை; அவரை மாற்ற வேண்டும் என்றும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனித்தனியாக கோரிக்கைககள் விடுத்துள்ளனர்.

எனினும், ஆளுநர் வித்யாசாகர் ராவ், இவ்விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல், மும்பை சென்றுவிட்டார். இந்தச் சூழ்நிலையில்தான், எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கோரி, கொறடா உத்தரவை மீறி ஆளுநரைச் சந்தித்ததால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால். நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உரிய விளக்கம் அளிக்காததால், 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். இதையடுத்து, கடந்த சில நாள்களாக சற்றே 'டல்'லாகி இருந்த அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

குடியரசத் தலைவருடன் வித்யாசாகர் ராவ்இதையடுத்தே ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றார். மெஜாரிட்டியை நிரூபிக்க ஏதுவாக, சட்டசபையைக் கூட்டி ஆளுநர் உத்தரவிட வேண்டும். அல்லது ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை சமர்ப்பிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். இரண்டும் இல்லாதபட்சத்தில், முதல்வருடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம்.

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில், ஆட்சியைக் கலைத்தால், அது தி.மு.க-வுக்கு சாதகமாகவே அமையும் என்பதால், அதுபோன்றதொரு முடிவை மத்திய அரசு எடுக்காது என்றே கருதலாம். ஆனால், தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெரும்பான்மையை இழந்து விட்ட எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றே கருத்து தெரிவித்துவருகின்றன. 

அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்ததைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம், தேர்தல் ஆணையத்தால் இன்னமும் திரும்ப வழங்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்துவிட்ட போதிலும், தினகரன் தலைமைக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலையில், தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு எந்த அளவுக்கு செல்வாக்கு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறிதான். நீட் தேர்வு, அதன் விளைவால் அனிதா மரணம், அதைத் தொடர்ந்து அரசியல்கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம், நெடுவாசல், கதிராமங்கலம் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளில் மத்திய அரசின் பாராமுகம் போன்ற காரணங்களினால் மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு மீது தமிழக மக்கள் ஒருவித அதிருப்தியிலேயே உள்ளனர். 

இதனால், இப்போதைக்கு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்றே மத்திய அரசு கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை வந்ததும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியபின், தற்காலிகத் தீர்வையே அறிவிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, தமிழக ஆட்சிக்கலைப்பு அடுத்த சில மாதங்களுக்கு இருக்காது என்றே தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement