நள்ளிரவில் வாகன ஓட்டிகளைப் பதறவைக்கும் பாம்பன் பாலம்!

திடீர் வேக தடை அமைக்கப்பட்டதால் திணறும் வாகனங்கள்

பாம்பன் சாலைப் பாலம் அருகே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திடீரென ஏற்படுத்திய வேகத்தடையினால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவருகின்றனர். நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகள் பயத்துடனே பாலத்தில் பயணிக்கின்றனர்.

ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப் பரப்புடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டது, அன்னை இந்திரா காந்தி பாலம் (பாம்பன் சாலைப் பாலம்). 30 ஆண்டுகளைத் தொட இருக்கும் இந்தப் பாலத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை மறைக்கும் வகையில், ரூ 2.58 கோடி செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் கொண்ட பாம்பன் சாலைப் பாலத்தில் தார், சுண்ணாம்பு, குவாரித்துகள் போன்றவற்றைக்கொண்டு ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. இந்தப் புதிய சாலையில் பயணித்த வாகனங்களுக்கு கிரிப் கிடைக்காத நிலையில், தொடர் விபத்துகள் ஏற்பட்டன.  ரப்பர் சாலை அமைக்கப்பட்ட 2 மாதங்களுக்குள்ளாகவே 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன.

இதையடுத்து, திருமுருகன் என்பவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், பாம்பன் சாலைப் பாலம் தொடர்பான வழக்கைத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த 17-ம் தேதி, பாம்பன் சாலைப் பாலத்தை நேரில் ஆய்வுசெய்தனர். மேலும், விபத்தைத் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, பாம்பன் சாலைப் பாலத்தின்மீது போடப்பட்டிருந்த ரப்பர் சாலை அகற்றப்பட்டு, கிரிப்புடன்கூடிய சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. மேலும், மண்டபத்திலிருந்து வரும் பாலப் பகுதியில் வேகத்தடை ஒன்றையும் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்தனர். இந்த வேகத்தடை அமைக்கப்பட்டது குறித்த அடையாளங்களோ, அறிவிப்புப் பலகைகளோ வைக்கப்படவில்லை. இதனால் திடீரென போடப்பட்ட வேகத் தடையில் சிக்கிய டூ வீலர்கள், கார், வேன்கள், பேருந்துகள் ஆகியவை விபத்துக்குள்ளாகின. விபத்தைத் தடுப்பதற்காகப் போடப்பட்ட வேகத்தடையே விபத்துகளை உருவாக்கும் தடையாக மாறியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகள் பயத்துடனே பாலத்தில் பயணிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!