வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (19/09/2017)

கடைசி தொடர்பு:14:56 (19/09/2017)

“தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலைப்பா..?” வித்யாசாகர் ராவ் டெல்லி பயண பின்னணி

வித்யாசாகர் ராவ்

தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வித்யாசாகர் ராவ், டெல்லியில் இரண்டுநாள் முகாமிட்டு ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சரை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வரானார். பின்னர், சசிகலா குடும்பத்துக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே அதிகார மோதல் உருவானதால், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். ஜெயலலிதா மரணம் குறித்து, 'நீதி விசாரணை நடத்த வேண்டும்; ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடம் ஆக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். மேலும், 'சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறேன்' என்றும் அவர் அறிவித்தார். 'சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்' என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 

இந்தச் சூழ்நிலையில், சசிகலா குடும்பத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் ஏற்பட்டதால், பன்னீர்செல்வம் அணியோடு நெருங்கிய எடப்பாடி பழனிசாமி, இரு அணிகளையும் இணைக்க முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்தன. பன்னீர்செல்வம்  துணை முதல்வராகவும், அவரது அணியில் இருந்த பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். இவர்களில், ஜக்கையன் எம்.எல்.ஏ பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பினார். இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ராஜ்நாத் சிங்-வித்யாசாகர் ராவ்

தமிழகத்தில் நடக்கும் இந்த அரசியல் மாற்றங்களை மும்பையில் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த ஆளுநார் வித்யாசாகர் ராவ், நேற்று டெல்லி சென்று உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரங்களை வித்யாசாகர் ராவ், அவர்கள் இருவருடமும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.  இந்நிலையில், இன்று காலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்தித்துப் பேசினார் வித்யாசாகர் ராவ். இந்த சந்திப்பு அரைமணி நேரம் நடந்தது. 

ஆளுநரின் இந்தச் சந்திப்புகள் குறித்து, டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ''தமிழக அரசுக்கு உள்ள பெரும்பான்மை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்துள்ள வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிக்கும் உத்தரவின் அடிப்படையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆளுநர் பேசினார். மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக எழுந்துள்ள சட்ட சிக்கல் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு மீதான மெஜாரிட்டியை நிருபிக்கும் கால அவகாசத்தைத் தள்ளிபோட்டுக் கொண்டிருக்க முடியாது என்பதற்கான காரணத்தைச்சொல்லி, அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்றோ, செல்லும் என்றோ நீதிமன்றத் தீர்ப்பு வரும்பட்சத்தில், அடுத்தக்கட்டமாக செய்யவேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்தும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்'' என்கிறார்கள். 

வித்யாசாகர் ராவின் சந்திப்புகள் குறித்து, ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''இரண்டு மாநில விவகாரங்களை வித்யாசாகர் ராவ் கவனித்து வருகிறார். மும்பையில் பெய்த மழை, வெள்ளம் தொடர்பான பிரச்னை, தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி, ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளிப்பது, அவரின் பணிசார்ந்த கடமை. தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றியும் இந்த சந்திப்பின்போது அவர் விவாதித்து இருக்கலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் கலைப்பு கோரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்து இருக்கலாம்'' என்கிறார்கள். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே எழுந்துள்ள மோதல், அதனால் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்தும் ஆளுநர் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்