மரவள்ளிக் கிழங்குக்கு நியாயமான விலை வேண்டி விவசாயிகள் போராட்டம்

மரவள்ளிக் கிழங்குக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் குரங்குச் சாவடியில் உள்ள சேகோ சர்வ் அலுவலகத்தின் முன்பு மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், ''சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருச்சி, கடலூர் என 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு 800-க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் மூலம் ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் மரவள்ளிக் கிழங்கு 10 மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் 300 ஆலைகள் மூலம் ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னடைவுக்குக் காரணம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படம் செய்யப்பட்டு ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதால் மரவள்ளிக் கிழங்கு மாவின் தேவை குறைவானதால் மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைவு ஏற்பட்டது. இதனால் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்ட  விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மரவள்ளிக் கிழங்கு பயிரிடுவதைத் தவிர்த்துவிட்டார்கள்.

மரவள்ளிக் கிழங்கின் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலைக்கு சேகோ ஆலைகள் மரவள்ளிக் கிழங்குகளைக் கேட்கிறார்கள். காரணம் ஒரிஜினல் மரவள்ளிக் கிழங்கு மாவோடு விலை குறைவாக உள்ள சோளமாவு கலப்படம் செய்து சவ்வரிசி தயாரிக்கிறார்கள். அல்லது ஒரிஜினல் மரவள்ளிக் கிழங்கு மாவோடு விலை குறைவான வெளிநாட்டில் இருந்து வரும் மரவள்ளிக் கழிவு மாவுகளோடு கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிக்கிறார்கள். இதனால் மரவள்ளிக் கிழங்குக்கான மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

கடந்த ஆண்டு ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு 12 ஆயிரத்துக்கும் மேல் விற்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 8 ஆயிரத்துக்கும் குறைவாக ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு விற்கப்படுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் தற்கொலை செய்து சாவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய சேகோ சர்வ் அலுவலர்கள் ஆலைகளிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இதைக் கண்டித்துப் போராட்டம் செய்யப்படுவதோடு மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படம் செய்யும் சேகோ ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து கலப்படம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆலைக்கு சீல் வைக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்குக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!