“ஆட்சியைக் கவிழ்க்க இன்னும் 12 பேர் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர்!” - தினகரன் நம்பிக்கை #VikatanExclusive | There are 12 Sleeper Cells in the opposite - T.T.V.Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (19/09/2017)

கடைசி தொடர்பு:14:54 (20/09/2017)

“ஆட்சியைக் கவிழ்க்க இன்னும் 12 பேர் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர்!” - தினகரன் நம்பிக்கை #VikatanExclusive

 

டி.டி.வி.தினகரன்

நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க் கட்சியினரும், சமூக அமைப்பினரும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் வேளையில், பி.ஜே.பி-யும், ஆளும் அ.தி.மு.க அரசும் அதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், டி.டி.வி.தினகரனும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இந்தத் தேர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதற்காக நேற்று திருச்சி சென்ற டி.டி.வி தினகரன், அங்கு புதிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதனிடையே, நேற்று சபாநாயகர் தனபால், தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்ய... தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பானது. 

இதுதொடர்பாகப் பேசிய டி.டி.வி.தினகரன், “1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெ. அணி எனக் கட்சிகள் இரண்டாகப் பிரிந்தன. அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அப்போதைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், வெற்றிபெறுவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார். அப்படித் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் தற்போதைய சபாநாயகர் தனபாலும் ஒருவர். இப்போது எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள், ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஆனால், ஓ.பி.எஸ் அணியில் இருந்த 11 எம்.எல்.ஏ-க்கள், இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்யாமல் காலம் தாழ்த்தினார்.

இந்நிலையில்தான், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்மீது துளியும் நம்பிக்கை இல்லை' என்பதால் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வருக்கு எதிராகக் கடிதம் கொடுத்தனர். இதற்காக சபாநாயகர், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்வார் எனத் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து நீதிகேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறோம். முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை ஆளுநர் உணர மறுத்ததன் விளைவு, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இந்த ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தக் காரணமாகிவிட்டது. வெளிப்படையாக எங்களுக்கு 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்றால், எடப்பாடி அணியில் ஸ்லீப்பர் செல்களாக இன்னும் 12 எம்.எல்.ஏ-க்கள் அமைதியாக இருக்கிறார்கள். இப்போது பலரும் என்னைத் தொடர்புகொண்டு, 'எடப்பாடி பழனிசாமி இதைப்போன்ற முடிவை எடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது நாங்கள் யார் எனக் காட்டுவோம். இது அம்மாவின் ஆட்சி அல்ல... ஒரு துரோகக் கும்பலின் ஆட்சி. இதுவரைப் பொறுமையாகக் காத்திருந்தோம். நேரம் வரும்போது ஜனநாயகக் கடமையைச் செய்து ஆட்சியைக் காப்போம் என அவர்கள் கூறி வருகிறார்கள்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்களின் பொறுமையான அணுகுமுறைதான் 18 பேரின் தகுதி நீக்கத்துக்குக் காரணம் என நினைக்கிறீர்களா?''

“பொறுத்தவர் எப்போதும் தோற்றதில்லை. வெற்றி பெறுவார். துரோகம் ஒருபோதும் வென்றதில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் சின்னம்மாவின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும். இது உற்சாகத்துக்காகக் கூறவில்லை. கடந்த 30ஆண்டு அரசியல் அனுபவத்தில் கூறுகிறேன். அம்மா உயிரோடு இருந்த காலத்திலேயே நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அம்மா உடல்நிலை சரியில்லாதபோது, அமைதிப்படை அண்ணன் ஓ.பி.எஸ் முதல்வராக்கப்பட்டார். அவராகப் பதவி விலகியவர் நடத்திய நாடகங்கள் ஊரறிந்த விஷயம். ஒருபோதும் சசிகலா நேரடியாக அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. அம்மாவின் இறப்புக்குப் பிறகு, கழகத்தை வழிநடத்த வேண்டும் என நூற்றுக்கு 99 சதவிகிதம் பேர் மன்றாடிக் கேட்டதால்தான்  சின்னம்மா பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்றார்.

பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் முடிவை ஏற்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலா பதவியேற்க முடியாமல்போனது. அவர் சிறை சென்ற பிறகு, அடுத்து சின்னம்மா, 'நிலைமை சரி இல்லை' என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தினார். அவர் ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ செய்துவிட்டார். நான் அவசரப்பட்டால் நிலைமையே வேறு, பொறுமையால் வெற்றி அடைவோம். இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கிற பொறுப்பு எனக்கும் உண்டு. இன்னும் ஒரு சில தினங்களில் வெற்றி பெறுவோம்.”

“18 பேர் தகுதி நீக்கப்பட்ட பின்னணியில் மத்திய அரசுக்குப் பங்கு உண்டா?”

“ஒரு மாநிலத்தில் இவ்வளவு பிரச்னை நடக்கும்போது, அதனைத் தடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஆனால், இவ்வளவு நடந்தும் வேடிக்கை பார்க்கிற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த ஜனநாயகப் படுகொலைக்காக வருங்காலத்தில் மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.”

“ ‘தமிழக அரசை பி.ஜே.பி-தான் இயக்குகிறது’ என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?”

“மத்திய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் ஜனநாயகத்தை மதிக்காமல் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இதற்காகத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஓ.பி.எஸ்ஸால் பதவி இல்லாமல் தூங்க முடியாது. பன்னீர்செல்வத்தின் துரோகம் மன்னிக்க முடியாது. அதேபோல், இன்னொருவர் எடப்பாடி பழனிசாமி. இவர்களுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவர்கள் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள். அந்தச் சின்னம் கிடைத்தாலும் பரவாயில்லை. கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.”

“அனைத்துக் கட்சிகளும் 18 பேர் தகுதி நீக்கத்துக்காகக் குரல் கொடுக்கின்றன. அப்படியானால், அவர்களுடன் சேர்ந்து செயல்படத் தயாரா?”

“18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கத்துக்காகப் பல தலைவர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். எங்களுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. தமிழகத்தின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். எங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி. ஆதரவளித்த அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-தான் எங்களுக்கு நேரடிப் போட்டி. தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.”

“இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டது செல்லாது எனப் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றித் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளதே ?”

“எங்களுக்கு ஆதரவாக 7 லட்சம் பேர் தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க-வையும், இரட்டை இலைச் சின்னத்தையும் சின்னம்மா தலைமையில் மீட்டெடுப்போம்.”

“தொடர்ந்து உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்மீதும் உங்கள்மீதும் வழக்குகள் போடப்படுகின்றனவே?”

“எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க நினைக்கிறார். அதற்காக என்னை ஆதரிக்கும் பழனியப்பன், செந்தில்பாலாஜிமீது வழக்குப் பதிந்து கைதுசெய்ய முயற்சி செய்கிறார். எடப்பாடி பழனிசாமி, துரோகத்தின் மொத்த உருவம். துரோக வரலாற்றில், நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவருக்கும் இடம் உண்டு. விரைவில் மாமியார் வீட்டுக்குக் குடும்பத்தோடு யார் செல்வார்கள் என்பதைப் பார்ப்போம். விளக்கு அணையும்போது எரிவதைப்போலத்தான் இப்போது நடக்கிறது.”

“போட்டி செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் கூட்டுவீர்களா?”

“விரைவில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டுவோம்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close