வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (19/09/2017)

கடைசி தொடர்பு:18:20 (19/09/2017)

முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

palaniappan


சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏப்ரல் மாதத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின் போது சில ஆதாரங்கள் சிக்கியநிலையில் அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தக் கடிதத்தில் விசாரணைத்துறை அதிகாரியின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் டி.டி.வி.தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை இருந்தது. எனவே, முன்ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்கு அதிகாரிகள் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பழனியப்பனுக்கு முன் ஜாமீன் வழங்கினர்.