நெல்லையைக் கலக்கிய செயின் பறிப்புக் கொள்ளையர் கைது! சி.சி.டி.வி உதவியால் சிக்கினர்

கொள்ளையர்

நெல்லையைக் கலக்கிய செயின் பறிப்புக் கொள்ளையர் இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறைக்குச் சவால்விடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போலீஸாருக்குச் சவால்விடும் வகையில் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில்கூட கைவரிசை காட்டினர். சமீப காலமாகத் துணிச்சலாகப் பட்டப்பகலில் திறந்து கிடக்கும் வீட்டுக்குள் நுழைந்து பெண்களைக் கத்தி முனையில் மிரட்டி நகைகளைப் பறித்துச் செல்லும் சம்பவங்களும் நடந்தன. 

நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பகுதியில் இருக்கும் குடியிருப்பு மற்றும் பாலபாக்யா நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியாமல் போலீஸார் திணறினார்கள். கடந்த 13-ம் தேதி பாலபாக்யா நகரில் சரவணலதா என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன் கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் கழுத்தில் கிடந்த நகைகளைப் பறித்தான். 

சிசிடிவி பதிவு

இதையடுத்து, சரவணலதா சத்தம் போட்டதால் 10 சவரன் நகையுடன் தப்பி ஓடினான். அப்போது தயாராக பைக்கில் நின்ற மற்றொரு நபரின் உதவியுடன் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இருப்பினும் அங்கிருந்த வீடு ஒன்றில் இருந்த சி.சி.டி.வி கேமரா மூலமாகக் கொள்ளையர்களின் உருவம் தெளிவாகப் பதிவாகி இருந்தது. அவர்களைக் கைதுசெய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து விசாரித்து வந்தனர்.  

இந்நிலையில், நெல்லையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவரை நெல்லை மாநகர போலீஸார் கைதுசெய்தனர். சி.சி.டி.வி மூலமாகத் தெரிய வந்த தூத்துக்குடி தபால்தந்தி நகரைச் சேர்ந்த செல்வம், விஜய் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

தப்பி ஓடும் காட்சி

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸார் கூறுகையில், ’’சி.சி.டி.வி-யில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்த காரணத்தினாலேயே அவர்களை எளிதாகக் கைதுசெய்ய முடிந்தது. அதனால்தான் வணிக நிறுவனங்களில் கேமரா வைக்குமாறு அறிவுறுத்துகிறோம். நகர்ப் புறத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் சி.சி.டி.வி கேமரா வைத்துக்கொள்வது நல்லது. காவல்துறையின் சார்பாகத் தற்போது கூடுதலாக ரோந்துப் பணி நடைபெறுகிறது. இருந்தாலும் பொதுமக்களும் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது’’ என்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!