வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (19/09/2017)

கடைசி தொடர்பு:12:20 (21/09/2017)

+2 வில் 928 எடுத்தும் கல்லூரிச் செல்ல முடியாத மாணவி!

மாணவி

கல்வி மட்டுமே தங்களின் வாழ்வில் ஒளியேற்றும் என நம்பி, படித்து வருகின்றனர் எளிய குடும்பத்துப் பிள்ளைகள். ஆனால், அவர்கள் நினைப்பது எளிதில் நடந்துவிடாது என்பதையே சமூகச் சூழல் உணர்த்துகிறது. அதற்கு மிகச் சமீபத்து உதாரணம் அனிதா. நோயின் கொடுமையால் தாயைப் பறிகொடுத்த அனிதா, மருத்துவக் கனவுடன் படித்து வந்தார். +2வில் எல்லோரும் வியக்கும் 1176 மதிப்பெண்களையும் பெற்றார். ஆனால், திடீரென்று நுழைக்கப்பட்ட நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்க வில்லை. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே உலுக்கியது. 

மிகவும் உள்ளொடுங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த படிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் வியர்வையைச் சிந்தி, ஒவ்வொரு ரூபாயாகச் சேகரித்து அனுப்பும் பணத்தை மனதில் கொண்டு படித்துத் தேர்ச்சிப் பெற்றாலும், கல்வியில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதில் பல தடைகள் இருக்கின்றன. அதனால் அவர்களின் கல்வியே பாதியில் நின்று விடுகிற துயரமும் நடைபெறுகிறது. அதுபோன்ற ஒருவர்தான் வெண்ணிலா. 

விக்கிரபாண்டியம் டோல் கேட் அருகில், புது கம்ட்டியில் உள்ளது வெண்ணிலாவின் வீடு. அவரின் அப்பா நாராயணன் கூலித் தொழிலாளி. செங்கல் சூளையில் கிடைக்கும் வேலையைச் செய்துவருபவர். மனைவியும் கூலி வேலைக்குச் செல்கிறார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். வெண்ணிலாதான் மூத்த பெண். வறுமையான சூழலில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் எந்தக் குறையும் வைக்காமல் வைக்கவில்லை. அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த வெண்ணிலா 928 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். கல்லூரியில் சேரலாம் எனும் ஆவலோடு இருந்தவருக்குத் தடையாக இருப்பதைப் பற்றிக் கூறுகிறார் அவரின் அப்பா நாராயணன். 

"நானும் என் மனைவியும் வேலைக்குப் போயிடுவோம். வெண்ணிலாதான் தம்பி, தங்கச்சிகளப் பார்த்துட்டு படிக்கும். 12-ம் வகுப்புப் படிச்சிட்டு காலேஜ்ல சேரலாம்னு பார்த்தா சாதி சான்றிதழ் இல்லைனு சேர்க்க மாட்டேங்கிறாங்க. நாங்க எஸ்.டி அதனால பள்ளிக்கூடத்துலேயும் சாதி சான்றிதழ் தர மாட்டேங்கிறாங்க. வெண்ணிலா விழுப்புரம் காலேஜ்ல போய் அப்ளிகேசன் போட்டிச்சு. சாதி சான்றிதழ் இல்லைன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. 

நானும் விழுப்புரம் ஆர்.டி.ஓ ஆபிக்கு நடையா நடக்கிறேன். மேலதிகாரிகள பார்க்க முடியல. கீழ உள்ளவங்க ஏதேதோ காரணம் சொல்றாங்க. என்ன சொல்லி, என்ன பிரயோஜனம். வேலை முடிய மாட்டேங்குது. வேற வழி இல்லாம, வெண்ணிலா துணிக் கடைக்கு வேலைக்குப் போவுது. காலையில 9 மணிக்குப் போனா, ராத்திரி 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். 

நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு, இப்படி இந்த வேலைக்குப் போவுதேன்னு நினைச்சு, வருத்தமாக இருக்கு. எங்களால வேற என்ன செய்ய முடியும்" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்.

இருளர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சாதியினருக்கான சாதி சான்றிதழைப் பெறுவதில் பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. மற்ற மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே சாதி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் சூழல் இருக்கிறது. ஆனால், எஸ்.டி பிரிவினர் ஆர்.டி.ஓ மூலமே பெற முடியும். இந்த நடைமுறை சற்று எளிமைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அல்லது ஏதேனும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தப் பகுதிக்கே அதிகாரிகள் சென்று சிறப்பு முகாம் அமைத்து சாதி சான்றிதழை வழங்கினால் உதவியாக இருக்கும் என்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எக்காரணம் கொண்டும் மாணவர்களின் கல்வித் தடைபடக்கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்