வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (19/09/2017)

கடைசி தொடர்பு:08:43 (20/09/2017)

அ.தி.மு.க அவைத்தலைவர்போல ஆளுநர் செயல்படுகிறார்..! டி.டி.வி.தினகரன் சாடல்

எடப்பாடி பழனிசாமி அரசின் அவைத்தலைவராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் டி.டி.வி.தினகரன் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 'நியாயம் கேட்ட 18 எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி அரசு தகுதி நீக்கம் செய்துள்ளது. 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் தவறு என்று நீதிமன்றத்தில் நிரூபிப்போம். தமிழக அரசு தவறான வாக்குறுதிகளை அளித்து மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்தார்.

அவசரச் சட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பழனிசாமி அரசின் அவைத்தலைவராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆளுநரின் செயல்பாட்டில் சந்தேகம் எழுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். அ.தி.மு.க பிரதான எதிரி தி.மு.க என்பது ஏழரைக் கோடி தமிழர்களுக்குத் தெரியும். தேர்தல் எப்போது வந்தாலும் வென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவருவோம். எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது' என்று தெரிவித்தார்.