வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (19/09/2017)

கடைசி தொடர்பு:13:17 (20/09/2017)

முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் தி.மு.க.! தேர்தலுக்குத் தயாராகிறதா?

தி மு க

மிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான தி.மு.க  தமிழகம் விரைவில் தேர்தலை சந்திக்க போகிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவினால், அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய தி.மு.க., தமிழக அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும் என வித்யாசாகர் ராவிடம் மனு அளித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த மனுவுக்கு ஆளுநர் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஆளுநரை சந்தித்தனர்.

அப்போது ஆளுநர் “என் அதிகாரத்துக்கு உட்பட்டுச் செயல்படுவேன்” என்று சொல்லியுள்ளார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார், என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்தனர். அப்படி ஒருநிலை வந்தால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள், ஆட்சி கவிழும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், எடப்பாடி அரசு, ஆட்சி என்னும் கயிற்றை தங்கள் பிடியில் இருந்து ஒருபோதும் விட்டு விடக்கூடாது என்றும்,  அதற்குப் பதிலாக எந்த விலையும் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதவியில் இருந்தால்தானே நமக்கு எதிராக வாக்களிப்பார்கள் பதவியிலேயே அவர்கள் இல்லையென்றால் எளிதாக நாம் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்துதான் 18 சட்டமன்ற உறுப்பி்னர்களைத் தகுதி இழப்புச் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த அசாதரணச் சூழ்நிலையில் தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஆனால், கடந்த சில தினங்களாகவே தி.மு.க-வின் செயல்பாடுகள் எல்லாம் தேர்தலை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற முப்பெரும் விழா, தேர்தலுக்கு முந்தய மாநாடு போலவே பிரமாண்ட அளவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. திண்டுக்கல்லில் மாநாடு நடத்தினால், அது ஆட்சிக்கு வழிகோலும் என்ற சென்ட்டிமெண்ட் தி.மு.க-வில் இருக்கிறது. மறுபுறம் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறாமல் உறுப்பினர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று ஸ்டாலினும் சொல்லியுள்ளார்.

உண்மையில் தி.மு.க-வின் இந்தச் செயல்பாடுகள் தேர்தல் வந்துவிடும் என்ற நம்பி்க்கையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளா? அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தவா என்று தி.மு.க-வின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “அ.தி.மு.க-வில் நடைபெற்று வரும் உட்கட்சிப் பிரச்னையில் தி.மு.க தலையிட வேண்டாம் என்ற மனநிலையில்தான் ஆரம்பத்தில் ஸ்டாலின் இருந்தார். அதுவே தொண்டர்களுக்கு வருத்தம்தான். இரண்டாவது முறையாக நாம் ஆட்சி அமைக்க வாய்ப்புக் கிடைத்தும், அதை நாமே தவிர்ப்பது ஏன் என்று தொண்டர்கள் புலம்பினர். அ.தி.மு.க-வில் குழப்பம் உச்சகட்டத்தை எட்டி, தினகரன் தரப்பே ஆளுநரிடம் மனு கொடுத்தபிறகுதான், இனியும் நாம் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்தார். 

தி.மு.க

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தாலும் கிட்டதட்ட ஆளுங்கட்சிக்கு இணையான உறுப்பினர்களைத் தங்கள் வசம் வைத்துள்ளது. இவ்வளவு உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு எதற்காக அமைதியாக இருக்கவேண்டும், ஆளும் தரப்பு பலம் இழந்தால் அதை எதிர்க்கட்சி சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவதே தார்மீக அரசியல். அதைக்கூட செய்யாமல் இருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்துதான் ஆளுநரைச் சந்தித்தனர் எதிர்கட்சியினர். ஆளுநர் அப்போதே, பெரும்பான்மைக்கு உத்தரவிட்டிருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், இப்போது பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபிறகு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் அது அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கும். இதனால் முதலில் நீதிமன்றத்தை நாடவே தி.மு,க திட்டமிட்டுள்ளது. அதோடு நீக்கபட்ட எம்.எல்.ஏ-க்களும் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர். அந்தத் தீர்ப்பு அரசின் முடிவுக்கு எதிராகவே வரும் என்று எதிர்பார்க்கின்றோம். 18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வரும் பட்சத்தில் நீதிமன்றம் மூலமே பெரும்பான்மையை நிரூபிக்க ஆவணம் செய்யஉள்ளோம். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் முன்பு கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநாடு, உறுப்பினர் சேர்க்கை, தளபதி சுற்றுப் பயணம் போன்றவை வரிசையாக நடைபெறுகிறது” என்றார்கள்.

தி.மு.க-வின் திட்டம் பலனளிக்குமா? என்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்