வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (20/09/2017)

கடைசி தொடர்பு:08:29 (20/09/2017)

"சபாநாயகர் தனபால் நடுநிலையோடு செயல்படவில்லை" -முத்தரசன் குற்றச்சாட்டு

‘’18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தனபால் நடுநிலையோடு செயல்படவில்லை. சட்டப்பேரவைக்கு அவர் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

mutharasan press meet

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், ‘’18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. பேரவைக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார். எடப்பாடி  அணி, ஓ.பி.எஸ் அணியாக பிரிந்த நேரத்தில் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் வாக்களிக்கவில்லை. அவர்கள் மீது சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  தங்களுக்கு எதிராக உள்ள தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை பேரவையிலிருந்து நீக்கிவிட்டால் தங்களுக்கு தொந்தரவு இருக்காது என்பதால்தான் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக எல்லாக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பா.ஜ.க மட்டுமே இதை வரவேற்றுள்ளது.

mutharasan press meet

எடப்பாடி அரசை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தபோதும், இதுசம்பந்தமாக சில கட்சிகள் கடிதம் அனுப்பியபோதும் ஆளுநர் ஏன் தொடர்ந்து மெளனம் காத்துவருகிறார். மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருக்கும்வரை தமிழகத்துக்கு பாதகமான ஜி.எஸ்.டி, உணவுப்பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் என எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த அவர் ஒப்புதல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி தலைமையிலான அரசு ஜெயலலிதா தடுத்துவந்த எல்லாத் திட்டத்தையும் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழகத்தில் நேரடியாக கால் பதிக்க முடியாத பா.ஜ.க., எடப்பாடி போன்ற தலையாட்டி பொம்மைகளை வைத்து காய் நகர்த்தி காரியத்தை சாதித்து  வருகிறது. தற்போதைய முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பதவி, பணம், சூழ்ச்சியால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார்களே தவிர தமிழக மக்கள் மீது துளியும் அக்கறையுடன் செயல்படவில்லை. இவர்களின் இந்த நடவடிக்கையால் மக்களின் ஆதரவை பெரும்பான்மையாக இழந்துவிட்டனர்.’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க