Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கட்சியைக் காப்பாற்ற 21 பேர் போராளிகளாக இருக்கிறார்கள்’ -தினகரனின் கண்டனப் பொதுக்கூட்டத்தின் முழு விவரம்

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் இன்று, டி.டி.வி.தினகரன் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார். பல்வேறு தடைகளுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில், பெருமளவு கூட்டத்தைக் கூட்டி அதகளப்படுத்திவிட்டது தினகரன் தரப்பு.

டி.டி.வி தினகரன்

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க தலைமையிலான அனைத்துக்கட்சிகளும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பி.ஜே.பி-யும் பொதுக்கூட்டங்கள் நடத்திய அதே திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் என்பதால், மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கழகத்தின் காவலரே!, வருங்கால முதல்வரே, திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையே, கம்பீரமே என வாசகங்கள் அடங்கிய கட்-அவுட்டுகளை வைத்து பளபளக்கச் செய்தனர். இந்தக் கூட்டத்துக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள், தங்கள் பலத்தைக் காண்பிக்க முந்நூறுக்கு மேல் வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். இதனால், திருச்சி மாநகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மேலும், வருங்கால முதல்வர் டி.டி.வி தினகரன் எனத் தொண்டர்கள் முழங்க, வாகனத்தில் மேடைக்கு வந்த தினகரன், அனிதா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் மைக் பிடித்தார்.

மேடையில் பேசிய டிடிவி தினகரன்,’’தனது கடைசி உயிர் மூச்சுவரை ஜெயலலிதா நீட் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர், 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்று, சமூகநீதியில் இந்தியாவில் தமிழகத்துக்கு முதலிடம் பெற்றுத்தந்தவர். மேலும், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வை ரத்துசெய்தார். அதனால்தான், கிராமப்புற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவராக முடிந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன், 2011ல் ஒட்டு மொத்தமாக நீட் கொண்டுவந்தார். அதை, ஜெயலலிதா எதிர்த்து உறுதியாகப் போராடியதுடன், 2013-ல் உச்ச நீதிமன்றத்திலும் போராடி நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கினார்.

தமிழகத்தில் இன்று நடைபெறுகிற துரோக ஆட்சி, அம்மா பாதையிலிருந்து பிரிந்து தவறான பாதையில் சென்று, தவறான வாக்குறுதி தந்து, நீட் விலக்கு எனச் சொன்னதால்தான் அனிதா மரணம் போன்ற துர் சம்பவம் ஏற்பட்டது. இதுபோன்ற தற்கொலைகள் தொடரக்கூடாது என்பதால், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தித்தான் இந்தக் கூட்டம் நடத்துகிறோம்..

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்கத்தான் சசிகலா ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக்கினார். ஆனால் ஓ.பி.எஸ், எதிரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர், தி.மு.க-வோடு சேர்ந்து செயல்படுகிறார் எனக் கூறிய ஈ.பி.எஸ், சசிகலாவிடம் வைத்த கோரிக்கையினால் ஆட்சிப் பொறுப்பும், கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்பியதால், சசிகலா முதல்வராக ஏற்றுக்கொண்டார். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பால் முதல்வராகப் பதவியேற்க முடியாமல்போனது.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்தால் பயனடைந்த பல மாணவர்கள், பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்கினார். 2011 ல் புரட்சித் தலைவர் ஆட்சியை உருவாக்கினார். சசிகலா நினைத்திருந்தால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரே முதல்வராகி இருக்க முடியும். ஆனால், கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோரை அடுத்தடுத்து முதல்வராக்கினார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கு, நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைப்பை அறிவித்துவிட்டு சசிகலா நீக்கப்படுவார் எனச் சொன்ன காரணத்தால், ஆளுநரைச் சந்தித்தோம். அவரிடம் முறையிட்டும் எடப்பாடி 117 உறுப்பினர் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் சொல்லியும் பலனில்லை.

மீண்டும் எடப்பாடி அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை உருவாக்கி, அனைத்து அமைச்சர்களும் வீட்டுக்குப் போவார்கள். நாம் தி.மு.க-வோடு கை கோக்க முடியாது. ஆட்சி கவிழ்ந்த பிறகு, எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் இது சபதம். அதுதான் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் மனநிலையும். கவர்னர் கவர்னராக செயல்படுகிறாரா அல்லது எடப்பாடியின் அவைத் தலைவராகச் செயல்படுகிறாரா? என்ற கேள்வி எழாமல் இருக்க, ஆளுநர் எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

மேலும், ”இந்தக் கட்சியைக் காப்பாற்ற 21 பேர் போராளிகளாக இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி மீதும் பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில், பழனியப்பன் ஜாமீன் வாங்கிவிட்டார். அ.தி.மு.க-வைக் காப்பாற்றப் போராடுகிற எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துவிட்டு, மெஜாரிட்டி நிரூபிக்க நினைக்கிறார்கள். நீதிமன்றம் இருப்பதையே மறந்துவிட்டுச் செயல்படுகிறார்கள். நிச்சயம் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடியைத் தோற்கடித்து, அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அம்மா ஆட்சியை அமைக்க உறுதியேற்க வேண்டும். சமூக நீதி காக்க மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement