வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (20/09/2017)

கடைசி தொடர்பு:13:41 (10/07/2018)

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளிக்கு விற்பனை இலக்கு வைத்த கலெக்டர்!

"வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, கரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

தீபத் திருநாளாம் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழாவை கரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் துவக்கிவைத்தார். அப்போது பேசிய அவர், "வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப ரூ.3,000 முதல் ரூ.20,000 வரை மதிப்புள்ள காஞ்சிபுரம் அசல் பட்டு ஜரிகை பட்டு புடவைகள், ரூ 5,000 முதல் ரூ.8,000 வரையுள்ள விலையில் மென்பட்டுப்புடவைகள் மற்றும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் கரூர் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்க இழை பரிசுத் திட்டத்தில், ரொக்கத்துக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு ரூ.2,000 மதிப்புள்ள துணி ரகங்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்பட்டு, அறிவுத்திறன் போட்டி முறையில் ஆண்டுதோறும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸ் கரூர் விற்பனை நிலையத்தின் இலக்கு, கடந்த ஆண்டு 33 லட்சமாக இருந்தது. இந்தாண்டு, 40 லட்சமாக இருக்கிறது. கோ-ஆப்டெக்ஸ் கரூர் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2017 சிறப்புத் தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு, இவ்வாண்டு புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் அசல் பட்டுச்சேலை ரகங்களும் அனைவரும் விரும்பும் மென்பட்டுப் புடவைகளும் பாரம்பர்ய வடிவமைப்புகளில் கோவை காட்டன், திண்டுக்கல், மணமேடு, அருப்புக்கோட்டை, நெகமம் மற்றும் கரூர் பருத்தி சேலைகளும், வீட்டு உபயோகத்துக்குத் தேவையான ஜெய்ப்பூர் மீரட், பிரின்டட் படுக்கை விரிப்புகள், ரெடிமேட் சர்ட்டுகள், தலையணை உறையுடன்கூடிய படுக்கைவிரிப்புகள் ஆகியவற்றுக்கு 30 சதவிகிதம் வரையிலான சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. ஏற்றுமதி ரகங்கள், ஆர்கானிக் சேலைகள், கனவு நனவுத்திட்டம், கடன் விற்பனை உள்ளிட்டவைகளும் உள்ளன. பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஜவுளி ரகங்களைக் கொள்முதல்செய்து பயனடைய வேண்டும்" என்றார்.