Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு பக்கம் சிறுத்தை... மறுபக்கம் கரடி... அச்சத்தில் மலையோர கிராமத்தினர்!

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தினரை சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகள் ஒரே சமயத்தில் அச்சுறுத்திவருவதால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 

சிறுத்தை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கிராமம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில், அடிக்கடி சிறுத்தை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திவருகிறது. குடியிருப்புக்குள் நுழைந்து, வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை சிறுத்தை அடித்துத் தூக்கிச் சென்றுவிடுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தப் பகுதி மக்களை அச்சுறுத்திய  ஆறு சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். 

ஆனாலும், இந்தப் பகுதியில் சிறுத்தைகளின் அட்டகாசம் குறையவில்லை. தற்போது, களக்காடு அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து, பொதுமக்களை மிரட்டிவருகிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்ற விவசாயி, தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள நெல் பயிரை காட்டு விலங்குகள் அழித்துவிடாமல் காவல் காக்கச் சென்றார். பாதுகாப்புக்காக நாயையும் உடன் அழைத்துச் சென்றார். 

காலையில் எழுந்து பார்த்தபோது, நாயை சிறுத்தை ஒன்று கடித்து இழுத்துச்சென்று தின்றுவிட்ட தடயங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஊருக்குள் சென்று, பொதுமக்களிடம் இதுபற்றி தெரியப்படுத்தினார். இதனால், அந்தப் பகுதி மக்கள் தோட்டத்துக்குச் செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அந்த சிறுத்தை, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சுற்றித் திரிவதைப் பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். அதனால், வனத்துறையினர் கூண்டு வைத்து அதைப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரடி

இதனிடையே, களக்காடு அருகே உள்ள கீழ்க்காடுவெட்டி கிராமத்தில், கரடி ஒன்று சுற்றித் திரிவதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மணிமுத்தாறு கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த சிலர், அந்தக் கரடியைப் பார்த்துள்ளனர். அவர்கள் விரட்டியதும் பொன்ராஜ் என்பவரின் மாந்தோப்புக்குள் சென்று பதுங்கிக்கொண்டது. அங்கிருந்த புதர்களுக்கு விவசாயிகள் தீ வைத்தனர். அதனால் அச்சம் அடைந்த கரடி, அங்கிருந்து தப்பியது.

பின்னர் அந்தக் கரடி, கீழ்க்காடுவெட்டி கிராமத்தின் தெருவில் நடந்துவந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள்: ஓடி கதவை அடைத்துக்கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், களக்காடு வனத்துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஒரு பக்கம் சிறுத்தை, மறுபக்கம் கரடி என மலையோர கிராமங்களை வன விலங்குகள் அச்சுறுத்திவருவதால், பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement