Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புஷ்கரத்தில் புனித நீராடினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நாகையில், இன்று மாலை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினார். அமைச்சர்களும் புனிதநீராடினார்கள்.

இவ்விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து வருகைதந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில், காலை 9 மணிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், மயிலாடுதுறை காவிரியின் வடக்குக் கரைக்கு 9.45 மணிக்கு வந்த முதல்வரை சிவபுரம் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். சங்கல்பம், வழிபாடு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு, காவிரியில் முதல்வர் புனித நீராடினார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் நீராடினார். இவர்களுக்கு முன்னதாகவே, காலையில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வீரமணி, காமராஜ் ஆகியோர் புனித நீராடிவிட்டு விழா நடைபெறும் நாகைக்குப் புறப்பட்டுச்சென்றனர்.

நீராடிய பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வடக்குக்கரையில் தங்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரிடம் ஆசிபெற்றார். சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்களை ஜெயலலிதா அரசு கைதுசெய்து சிறையில் அடைத்தது. அதன்பின், அ.தி.மு.க-வுக்கும் சங்கர மடத்துக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா இல்லாத நிலையில், மத்திய அரசின் உதவிகளைப்பெற சங்கர மடத்தின் ஆசீர்வாதம் எடப்பாடி அரசுக்கு அவசியம் தேவை. அதனாலேயே, புஷ்கரத்தில் நீராட வந்ததுபோல காட்டிக்கொண்டு, சங்கராச்சாரியார்களைச் சந்தித்தார். இந்த இணைப்புக்காக, கடந்த ஒரு மாதமாகவே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர், அடிக்கடி சங்கராச்சாரியார்களைச் சந்தித்து ஏற்பாடுகளைச் செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை செல்லும் வழியில், பூம்புகார் தொகுதி சார்பில் செம்பனார்கோயிலில் எம்.எல்.ஏ., பவுன்ராஜ், முதல்வருக்கு வரவேற்பு அளித்தார். அதேபோல தரங்கம்பாடியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்டுச்செல்லும் முதல்வர், நாகை பயணியர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மாலையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement