'நான் தவறு செய்துவிட்டேன்!' - ஆதரவாளர்களிடம் மனம்விட்டுப் பேசிய தினகரன் #VikatanExclusive | 'I made a mistake!' - Dinakaran speaks to his supporter

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (20/09/2017)

கடைசி தொடர்பு:21:02 (20/09/2017)

'நான் தவறு செய்துவிட்டேன்!' - ஆதரவாளர்களிடம் மனம்விட்டுப் பேசிய தினகரன் #VikatanExclusive

திருச்சி கூட்டத்தில் தினகரன்

'எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதில் நான் தவறு செய்துவிட்டேன்' என்று திருச்சிப் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தினகரன், தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். மேலும், அவர் புதிய கட்சியைத் தொடங்கலாமா என்றும் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு தர்மயுத்தத்தை நடத்தி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வெற்றிபெற்றுவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவால் நீக்கப்பட்ட மற்றும்  நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்த எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முயற்சிகள் செய்துவருகின்றனர்.

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து ஆட்சிக்கு ஏற்பட்ட சிக்கலிலிருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளது, எடப்பாடி பழனிசாமி தரப்பு. இருப்பினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு, தினகரன் மற்றும் தி.மு.க தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. இதனால், இந்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இடியாப்பச் சிக்கலைத் தீர்க்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திருச்சிப் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளனர். கூட்டத்துக்கு, தமிழகம் முழுவதிலுமிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 'ஆட்களை' அழைத்துவந்துள்ளனர். இதனால், திருச்சி கூட்டத்துக்குப் பிறகு உற்சாகத்திலிருக்கிறார் தினகரன். கூட்டத்தை முடித்துவிட்டு வந்த தினகரன், தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். அப்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரனின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள், "மதுரைக் கூட்டத்தைவிட திருச்சிக் கூட்டத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை தினகரனையே மிரளவைத்துள்ளது. அவர், தங்கியிருந்த ஓட்டலிலிருந்து கூட்டம்  நடந்த இடம் வரை அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த தினகரன், அ.தி.மு.க தொண்டர்களைப் பார்த்து பிரமித்துப்போய்விட்டார். இதனால் அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். அவரது இந்தப் பேச்சுக்குத் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் திருச்சிக்கு வரத் தயாராகவே இருந்தனர். ஆனால், அவர்களை வரவேண்டாம் என்று தினகரன் தரப்பிலிருந்து போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் தங்கியிருக்கும் தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்களுக்கு போலீஸார் மூலம் பல்வேறு மிரட்டல்கள், நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திருச்சிக் கூட்டத்துக்கு அவர்கள் வந்தால், போலீஸார் மூலம் சிக்கல் ஏற்படும். இதனால், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அவர்கள் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வருவார்கள். 
 இதற்கிடையில், தினகரன் தலைமையில் சசிகலாவைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திருச்சிக் கூட்டத்தை முடித்துவிட்டு தினகரன், பெங்களூரு செல்கிறார். கர்நாடக சொகுசு விடுதியிலிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் பெங்களூரு செல்ல உள்ளனர். சசிகலாவிடம் அடுத்தகட்ட ஆலோசனையை நடத்திவிட்டு, அதிரடி அறிவிப்புகளை தினகரன் அறிவிக்க உள்ளார். அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 தினகரன் ஆதரவாளர்கள் நடத்திய திருச்சி பொதுக்கூட்டம்

திருச்சிப் பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹோட்டல் அறைக்கு வந்த தினகரன், தன்னுடைய நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ''சசிகலாவை அ.தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்த 122 எம்.எல்.ஏ-க்களின் கடிதத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்கச் சென்றபோது நடந்த நிகழ்வுகளைத் தினகரன் குறிப்பிட்டார். 'சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும், 'அடுத்து யார் முதல்வர்?' என்ற ஆலோசனை கூவத்தூரில் நடந்தது. அப்போது, முதல்வர் பதவிக்கு என்னுடைய பெயரைத்தான் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் முன்மொழிந்தனர். எனக்கு முதல்வர் பதவிமீது ஆசையில்லை. நான் முதல்வரானால், சர்ச்சைகள் ஏற்படும்.

இதனால், எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையில் அவரை முதல்வராக்கி, ஆட்சிப் பொறுப்பை சசிகலாவும் நானும் கொடுத்தோம். ஓ.பன்னீர்செல்வத்திடம் மூன்று முறை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அவர், அதைத் திரும்பக் கொடுத்துவிட்டார். அதுபோல நம்பித்தான் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். ஆனால், அவர் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நான் செய்த தவறு' என்று மனம்விட்டுப் பேசினார். அதை நாங்களும் ஆமோதித்தோம். 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். தேர்தல் ஆணையமும் நமக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தால், அ.தி.மு.க-வுக்குப் போட்டியாக புதிய கட்சி தொடங்குவோம்' என்று தினகரன் சொல்லியிருக்கிறார். திருச்சிப் பொதுக்கூட்டத்தில் ஆதரவாளர்கள் எழுச்சிக்குப்பிறகே, புதிய கட்சி என்ற எண்ணம் தினகரன் மனதில் ஏற்பட்டுள்ளது" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close