எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்: சபாநாயகர் உத்தரவுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | 18 MLAs of TTV Dinakaran's camp stand disqualified, case adjourned to 4th October

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (20/09/2017)

கடைசி தொடர்பு:14:30 (20/09/2017)

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்: சபாநாயகர் உத்தரவுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சபாநாயகர் தனபாலின் உத்தரவுக்குத் தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

தினகரன் ஆதரவு நிலைப்பாடுகொண்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காகவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பேரவைத் தலைவர் சபாநாயகராகச் செயல்படாமல், ஒரு கட்சிக்கு ஆதரவாக, கட்சிக்காரர்போல செயல்படுகிறார். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால், முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்றோம். எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க, போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. 18 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு எதிராகச் செயல்படவில்லை.  மூன்று வார காலத்துக்குள், அவசரகதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார். மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார். சபாநாயகர் தரப்பில் வாதிடுகையில், ‘வழக்குக்குத் தேவையில்லாத வாதங்கள் எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. இந்த வழக்கில், அரசு மீதும் சபாநாயகர் மீதும் குற்றம் சாட்டப்படுவதால், விரிவான ஆவணங்களைத் தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதுக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார். அதேநேரம், சபாநாயகர் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்துக்குத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்தக் கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு, எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பேரவைச் செயலாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுக் கொறடா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதேபோல, தி.மு.க தொடர்ந்த வழக்கின் விசாரணையும் அக்டோபர் 4-ம் தேதி இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி குறிப்பிட்டார்.    
 


[X] Close

[X] Close