வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (20/09/2017)

கடைசி தொடர்பு:14:25 (20/09/2017)

'ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது!' - ராஜன் செல்லப்பா

 

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  "எத்தனை நாள் பதவியில் இருக்கிறோம் என்பதைவிட என்ன செய்தோம் என்பதே முக்கியம். இதுவரை மதுரைக்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தும் அறிவிப்புகளை இன்னும் வழங்கவில்லை. மதுரையில் உள்ளாட்சி நிதி ஒதுக்கப்படாமல், கடுமையான நெருக்கடியில் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. நேரடியாக இருமுறை நினைவூட்டியும் இதுவரை வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக எந்த உத்தரவையும் முதல்வர் வழங்கவில்லை. சசிகலாவை நீக்கியதில் எனக்கு விருப்பமில்லை என்பதைவிட, அதைத் தவிர்க்கலாம் என்பதால்தான் ஒப்புக்கொண்டேன்.

18 எம்.எல்.ஏ-க்களை நீக்கியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு. இருந்தாலும் சபாநாயகர் சட்டவிதிகளைப் பின்பற்றியிருக்கிறார். அவர்களை நீக்கியதற்குப் பதில் இடைநீக்கம் செய்திருக்கலாம். ஸ்லீப்பர் செல் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. நான் சுதந்திரமாக முடிவெடுப்பேன். என் முடிவு அம்மா ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும். டி.டி.வி-யை இணைப்பதற்கான காலம் இன்றைக்கு வரவில்லை. அப்படி ஒரு சூழல் வரும்போது, என்னைப் போன்றோர் இணைக்க முன் நிற்போம். அழகிரி மட்டுமல்ல யாருமே அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி தர முடியாது. தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ அப்படி ஒரு கருத்தை கூறியிருக்கலாம்'' என்றார்.