தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுப்போம்..! புழல் சிறைவாயிலில் திருமுருகன் காந்தி சூளுரை

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

குண்டர் சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நால்வரும் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் சிறை வாசலில் அவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, 'இந்திய அரசின் அடக்கு முறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம். தமிழ் இனத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம். இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழகம் முழுவதும் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவோம். இந்தச் சிறைத்தண்டனை எங்களைத் தடுத்துவிடாது. தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுப்போம்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!