திருமுருகன் காந்தி உட்பட 4 பேருக்குக் கொண்டாட்ட வரவேற்பு | warm welcome for Thirumurugan Gandhi and 3 others

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (20/09/2017)

கடைசி தொடர்பு:17:30 (20/09/2017)

திருமுருகன் காந்தி உட்பட 4 பேருக்குக் கொண்டாட்ட வரவேற்பு

திருமுருகன் காந்தி வரவேற்பு

குண்டர் சட்டத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மூவரும் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டனர். வெளியே வந்த நான்கு பேரையும் சிறை வாசலில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பிரமுகர்களும் வரவேற்றனர். 

ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நடிகர் மன்சூர் அலிகான், குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சேலம் இதழியல் மாணவர் வளர்மதி உட்பட பலரும் திருமுருகனை வரவேற்றனர். முன்னதாகச் சிறை வாயிலில் தோலிசைக் கருவிகளின் இசையாட்டம் நடைபெற்றது. 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி,

“கதிராமங்கலம், நெடுவாசல், நீட் எனப் பல பிரச்னைகளில் தமிழர்கள் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் இதைத் தொடர்ந்து சொல்லிவருகிறோம். தமிழக அரசு மத்திய அரசின் அடிமையைப்போல இருக்கிறது. இதை அகற்ற வேண்டும். எங்களுக்கு என்ன தண்டனை அளித்தாலும் தமிழ்த் தேசியத்துக்கான எங்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கும். அரசியல் கட்சித் தொடங்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். நாங்கள் தந்தை பெரியாரின் வழியிலானது. ஆளும் அரசைச் செயல்பட வைக்கும் சக்தியாக இருப்போம்” என்று கூறினார். 

நான்கு பேரையும் வரவேற்கக் கூடியிருந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சிறிது அங்கு நெரிசல் ஏற்பட்டது.