முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,315 பேருக்குப் பணி நியமன ஆணை!

 

எடப்பாடி பழனிசாமி

போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2,315 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி நியமனை ஆணைகளை சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 3,375 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 1-ம் தேதி நடந்தது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2,315 பேர் மட்டுமே எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்காததால் 1,060 இடங்கள் இப்போது காலியாக உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதரப் பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இதைத்தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வியாழக்கிழமை (21-ம் தேதி) நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணையை  வழங்குகிறார். அதற்கு வெகுவிமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தகுதியான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் காலியாகவுள்ள 1,060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதன் கூறுகையில், "முறைப்படி தேர்வு நடத்தி தகுதியான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்து கொடுத்துள்ளோம். அரசு கேட்டுக்கொண்டால் எந்நேரமும் போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!