'மாநாட்டுக்குப் பணம் கொடுங்க!' - அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வி.சி.க

vck

வேலூரில் கடந்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளைக் கொண்டாட கடை ஊழியரிடம் நன்கொடை கேட்டு அவரை அடித்த சம்பவம் நடந்தேறியது. தற்போது மீண்டும் பெரம்பலூரில் அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக் கூட்டம் நடத்த பணம் கொடுக்கவில்லை என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைத் தகாத வார்த்தையால் திட்டியதோடு மட்டுமல்லாமல் பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்மீது காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூர் கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் கலையரசன் குடித்துவிட்டு சார்பதிவாளார் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ், ஷோபா இருவரிடமும் ஒரு நோட்டீஸைக் கொடுத்துவிட்டு ’வருகிற 21-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அந்த மாநாட்டுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பணம் கொடுக்க வேண்டும் என்று ஆணை வந்திருக்கிறது. அதனால்தான் வசூல் செய்ய வந்திருக்கிறோம். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரமேஷ், ஷோபா ஆகிய இரண்டு அதிகாரிகளும் மறுக்கவே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால்தான் மற்ற கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளிடம் இதுபோல் நடந்துகொள்ளமாட்டார்கள் என்று முடிவெடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பிரச்னைகளை வீடியோ ஆதாரங்களுடன் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஷோபா. அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் கலையரசனைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் சிட்டுவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ”விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இதுபோல் நன்கொடைக்காகக் காசு வாங்குவது வழக்கம். இதற்கு முன்னரும் இதேபோல் பா.ம.க-வினர் அரசு அலுவலகத்தில் பணம் வாங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் கட்சியின் மாவட்டப் பொருளாளர் நன்கொடை கேட்டுள்ளார். ஆனால், புகார் அளித்த அதிகாரி சாதியைக் காரணம்காட்டி பணம் தர மறுத்து புகார் அளித்துள்ளார்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!