Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தினம் மாறும் பெட்ரோல் விலை... ஆண்டுதோறும் ஏறும் தேர்வுக் கட்டணம்’ - மாணவர்கள் போராட்டம்!

மாணவர்களின் கல்லூரிக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ம.தி.தா இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார்கள்.  

மாணவர்கள் போராட்டம்

நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் 60-க்கும் அதிகமான கல்லூரிகள் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான தேர்வுக் கட்டணம் கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் கட்டண உயர்வு ஓரளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தேர்வுக் கட்டணத்தைப் பல்கலைக்கழகம் அதிகரித்து இருக்கிறது. 

இந்த நடவடிக்கைக்குப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களிடமும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் தேர்வுக் கட்டணக் குறைப்பை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். நெல்லைப் பேட்டையில் உள்ள ம.தி.தா இந்துக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார்கள்.

கல்லூரியில் உள்ளிருப்பு

இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள். இது குறித்துப் பேசிய மாணவர்கள், ''மோடி அரசு பதவியேற்றதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டுவருவதாக அறிவித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது.அதேபோல பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாஸ்கரன் பொறுப்பேற்றதும் வருடந்தோறும் தேர்வுக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலமாக வருடத்துக்கு ஒருமுறை கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களைக்கொண்ட தென் மாவட்டங்களில் மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியாமல் படிக்கும் வாய்ப்பை இழக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால், கட்டண உயர்வை எதிர்த்து வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டோம். பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில் பிச்சை எடுத்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போகிறோம்’’ என்றார்கள் ஆத்திரத்துடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement