புதுச்சேரியில் பாலிதீன் பைகளுக்குத் தடை - அமைச்சர் கந்தசாமி அதிரடி

 

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக அமெரிக்கத் தொழில்நுட்பத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மாற்றுப் பைகளைத் தயாரிக்க புதுச்சேரி அரசு புதிய முயற்சி. மேலும், புதுச்சேரியில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகளைத் தயாரிக்கவும் இறக்குமதி செய்யவும் தடை எனச் சுற்றுசூழல் துறை அமைச்சர் கந்தசாமி தகவல்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி அரசின் அறிவிப்புக்கு எதிராக மளிகை மற்றும் காய்கறிக் கடைகள், உணவகங்களில் 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பாலிதீன் காகிதங்களைப் பயன்படுத்துகிறார்கள். இனி 50 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பாலிதீன் பைகளைப் பயன்படுத்தவோ தயாரிக்கவோ கூடாது. வெள்ளை நிற பாலிதீன் தாள்களை பிரியாணி மற்றும் சூடாகச் சமைக்கப்பட்ட உணவை பார்சல் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

எனவே, சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் அப்படியான காகிதங்களைப் பயன்படுத்தக் கூடாது. இனிவரும் காலங்களில் உணவுத்துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் சோதனை மேற்கொள்வார்கள். அப்போது அரசு உத்தரவை மீறி பாலிதீன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமீபகாலமாகத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்கூட பிளாஸ்டிக் இலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த நிலை மாறி வாழை இலை பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்த 6 மாதத்துக்குள் 50 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பாலிதீன் பைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்படும். பொதுமக்கள் பாலிதீன் பைகளுக்கு மாற்றாகத் துணி அல்லது காகிதப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். பாலிதீன் பைகளுக்கு மாற்றாக அமெரிக்கத் தொழில்நுட்பத்துடன் எளிதில் மக்கக்கூடிய பைகளைத் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு அரசின் மானியமும் அளிக்கப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!