வெளியிடப்பட்ட நேரம்: 22:26 (20/09/2017)

கடைசி தொடர்பு:22:26 (20/09/2017)

வைகை நதியைப் பாதுகாக்க ஆட்சியர் தலைமையில் கமிட்டி..!

வைகை நதி ஆக்கிரமிப்புப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், வைகையைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில் நடந்த தூய்மையே சேவை நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், 'பிரதமரின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்களே முன்வந்து தங்களது பள்ளிக் கல்லூரியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீரராகவராவ்

நீங்கள் பயிலும் கல்லூரி, பள்ளிகள் முன்மாதிரியானவையாகத் திகழ வேண்டும். மதுரை மாவட்டத்துக்குப் பெரும் அடையாளமாகத் திகழும் வைகை நதியைப் புனரமைக்க என் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் முக்கியமாக ஐந்து திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. வைகை நதியில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றுவது, கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்வரத்துப் பாதைகளைச் சரிசெய்வது, ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகளை நடுவது, வைகை ஆற்றின்; தண்ணீர் ஓட்டத்தினை சரிசெய்வது ஆகும். வருகின்ற 28-ம் தேதி வைகை நதியைச் சுத்தம் செய்ய பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் நானும் உங்களுடன் கலந்துகொண்டு இப்பணியைச் செய்ய உள்ளோம். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க