ஜெயலலிதாவின் ஆட்சியை சீரழிக்கிறார்கள்..! தீபா ஆவேசம்

ஜெயலலிதாவின் ஆட்சியை சீரழித்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவைச் செயலர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

             

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் வீட்டுக்கு தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் இன்று சென்றனர். அப்போது அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, அங்கு அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தனர்.

                

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ' நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால்தான் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதே ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது. அனிதாவின் மரணத்துக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

கல்வியை மாநில உரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். வருங்கால மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தமிழக ஆட்சியாளர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. ஆளுநர் சட்டப்பேரவையைக் கூட்டி ஆளும் கட்சியினர் பலத்தை நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டுமென்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

                     


சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடிய பட்சத்தில் 234 தொகுதியிலும் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் கட்சி போட்டியிடும். ஜெயலலிதாவின் ஆசி எனக்குள்ளது. கண்டிப்பாக வெற்றிபெறுவேன்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!