வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (20/09/2017)

கடைசி தொடர்பு:08:04 (21/09/2017)

''பால் சம்பந்தமான வதந்திகளை நம்பவேண்டாம்!'' பால் முகவர்கள் நலச் சங்கம் வேண்டுகோள்

பால்  

''ங்களுக்குப் பொதுமக்கள் உதவவில்லை என்றாலும் பரவாயில்லை. விஷமிகள், பால் சம்பந்தமாக அனுப்பும் மெசேஜ்களை சமூக வலைதளங்களில் தயவுசெய்து பரப்ப வேண்டாம்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமியிடம் பேசினோம். " 'பிரேக்கிங் நியூஸ்' என்ற பெயரில் பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதைப்போல 'பால் விலையை விவசாயிகளே தீர்மானிப்போம்' என்றும், அதற்காக 'வரும் 15.01.2018 மாட்டுப்பொங்கல் முதல் பசும்பாலை லிட்டருக்கு 26 ரூபாயாகவும், எருமைப்பாலை லிட்டருக்கு 32 ரூபாயாகவும் கொள்முதல் விலையாக அறிவிக்கிறோம்' எனவும்,'இதற்கு குறைவான விலையில்... தமிழகம் மற்றும் புதுவையில் விவசாயிகள் பால் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டாம்' என்கிற தவறான செய்தியை ஏதோ சில விஷமிகள் பரப்புவதைப் பொதுமக்களும் நம்பி, 'பால் உற்பத்தியாளர்களுக்கு உதவுகிறோம்' என்று அதை வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைதளங்களில் தற்போது பரப்பத் தொடங்கி இருக்கிறார்கள். அதோடு, 'இந்தத் தகவலை அனைவரும் பகிருங்கள்' எனவும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விஷமத்தனமான வதந்திகளை உருவாக்கியவர்களுக்குத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, மேற்கொண்டு இந்தத் தகவலை எவரும் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் எனவும், அவ்வாறு பரப்பப்படும் மேற்கண்ட இந்தத் தகவலைப் பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பொன்னுசாமி ஏனெனில், கடந்த 2014-ம் ஆண்டுமுதல் தமிழக அரசு, பசும்பாலை லிட்டருக்கு 28 ரூபாயாகவும், எருமைப்பாலை லிட்டருக்கு 35 ரூபாயாகவும்  நிர்ணயம் செய்தும், தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களின் போட்டி நிறுவனங்களுக்கேற்ப ஒவ்வொருவிதமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தும், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலினைக் கொள்முதல் செய்துவருகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, அரசு நிர்ணயம் செய்த விலையைவிடக் குறைந்த விலையை நிர்ணயம் செய்யப்போவதாக வதந்திகளைப் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி காரணமாக பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கறவை மாடுகளின் விலை உயர்ந்ததால், பால் உற்பத்தியாளர்களுக்கு அதன் உற்பத்திக்கான செலவினங்கள் கட்டுப்படியாகவில்லை. அதன் காரணமாக, 'பசும்பாலுக்கான விலையை ஒரு லிட்டருக்கு 35 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலையை ஒரு லிட்டருக்கு 40 ரூபாயாகவும் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களைத் தமிழக அரசை நோக்கிப் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மேற்கொண்டன.

 பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகளையும் அரசுக்கு முன்வைத்தன. ஆனால்,வழக்கம்போல் அ.தி.மு.க அரசு தனது கண்களையும்,காதுகளையும் இறுக மூடிக்கொண்டது மட்டுமின்றி, உயிரைக் கொல்லும் மதுவுக்கும், உள்கட்சிப் பிரச்னைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தில் பத்து சதவிகிதம்கூட உயிர் காக்கும் பொருளான பாலுக்குக் கொடுக்கவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயம். இந்தச் சூழலில், பொதுமக்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து அவர்களுக்கு எதிராக யாரோ சில விஷமிகள் உருவாக்கிய வதந்திகளைச் சமூக வலைதளங்களில் பரப்புவது என்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமமாகும். எனவே, ஒவ்வொருவரும் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவாதம் கொடுக்காமல் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 அதேபோல் தமிழக அரசும், தனியார் பால் நிறுவனங்களும் குறைந்தபட்சம் பசும்பாலுக்கான விலையை லிட்டருக்கு 35 ரூபாயாகவும்,எருமைப்பாலுக்கான விலையை லிட்டருக்கு 40 ரூபாயாகவும் நிர்ணயம் செய்து வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்களின் கரங்களுக்கு வலுசேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஆனால், வதந்திகளை மட்டும் தயவுசெய்து சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்